நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர். சனகன் பரசுராமனை வணங்கிச் சீதையையும் வணங்கச் செய்கிறான். விசுவாமித்திரன் இராமலக்குவர்களை அறிமுகம் செய்து வணங்கச் சொல்கிறான். அவர்களும் பரசுராமனைப் பணிவுடன் வணங்கி எழுகின்றனர். இந்த வழிபாடுகளால் சற்றுக் கோபந்தணிந்த பரசுராமன் சனகனை நோக்கி, அங்கே ஒடிந்து சிதறிக்கிடந்த வில்லையும் நோக்கி, ‘இதை ஒடித்தவன் யார்?’ என்று கோபமாகக் கேட்கிறான். அப்போது இலக்குவன் அவன் எதிரில் நின்று. “இது மிகவும் பழைய உளுத்துப் போன வில். எனவே இராமன் அதை தொட்டதும் முறிந்து போயிற்று. இதற்காகத் தாங்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என்றான். உடனே சீற்றத்தைப் புதுப்பித்துக் கொண்ட பரசுராமன், “சிறுவனே, என்னை, என் பெருமையினை அறியாது பேசுகிறாய். என்னுடைய இந்தக் கோடாரியைப் பார். ஆயிரந் தோளுடைய கார்த்த வீரியனைக் கொன்றழித்த ஆயுதம் இது” என்றான். இலக்குவன் அவன் சொற்களைக் கேட்டு நகைத்து, “அந்தணர்கள் ஆயுதமும் ஏந்துகிறார்கள் என்று இப்போதுதான் கேள்விப் படுகிறேன், போகட்டும். கடவுளரையும் அந்தணர்களையும், பசுவையும், திருமாலடியார்களையும் நாங்கள் எதிர்ப்பதில்லை. அவர்களுடன் போரிடமாட்டோம். அது எங்கள் பெருமைக்குக் குறைவு” என்று பதில் அளிக்கிறான். பரசுராமன் விசுவாமித்திரனை நோக்கி, ‘முனிவரே, இந்தச் சிறுவனை அடக்கி வையுங்கள். இன்றேல் இவன் இப்போதே எமனுலகு சேர்வான்’ என்று வெகுண்டுரைத்தான். மேலும் மேலும் பரசுராமனைக் கிண்டிக் கிளறிப் பரிகாசம் செய்துகொண்டிருந்த இலக்குவனை அடக்கிவிட்டு இராமன் பரசுராமனை நோக்கி, “அந்தணராகிய தங்கட்கு இவ்வளவு சீற்றம் வரலாகாது” என்று பணிவான சொற்களைக் கூறுகிறான். எனினும், பரசுராமன் தன் வீரப் பிரதாபங்களையெல்லாம் பலவாறாக அடுக்கிக் கூறி “வில்லை ஒடித்த உன்னையும் கொல்லாமல் விடமாட்டேன்” என்று சினந்து கூறுகிறான். அப்போது இராமன் ‘நான் எவ்வளவு அறிவுறுத்தியும் தாங்கள் செவிசாய்க்கவில்லை. இப்போது தாங்கள் விரும்பியவாறே செய்யலாம்’ என்று கூறப் பரசுராமன் தன் வில்லைக் காட்டி, ‘இதை வளைத்து நாணேற்றினால் நான் உன்னை உள்ளவாறு அறிந்துகொள்வேன்’ என்றான். பரசுராமன் இதைக் கூறி முடிக்கும் முன்னே அந்த வில் தானாக நகர்ந்து வந்து இராமன் கையில் அடைக்கலமாயிற்று. இதைக் கண்ட பரசுராமன், இராமன் திருமாலின் அவதாரமே என உணர்ந்து, அவனை வணங்கி வாழ்த்தித் தவம் செய்யப் புறப்பட்டுப் போனான். இவற்றை |