இருக்கிற சமுதாயத்தில் இப்படிப்பட்ட குறைபாடுகள் இருந்துதான் தீரும். இவற்றையெல்லாம் மனத்தில் வாங்கிக்கொண்ட கம்பநாடன் இவற்றுக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்று நினைத்தான் போலும். ஆகவே, தான் பாட எடுத்துக்கொண்ட காப்பியத்தில் கோசல நாட்டில் இப்படி ஒரு கற்பனைச் சமுதாயத்தை அமைத்து, பிரச்சனை இல்லாத சமுதாயம் என்று காட்ட முற்படுகிறான். அது மட்டுமன்று. இப்படி ஒரு கற்பனை நாட்டைப் பாடுவதன் மூலம் பின்னே வளர்ந்து வருகின்ற சோழப் பேரரசு சமுதாயத்தை அமைக்கும்போது உடையார்-இல்லார் வேறுபாட்டை மிகுதிப்படுத்தாததாய் இருக்க வேண்டும் என்று அவன் கருதியிருத்தல் கூடும். அப்படியானால்-அந்தப் பெருங்காப்பியம் ஒரு கலங்கரை விளக்கமாக நின்று சமுதாயம் எப்படி அமைய வேண்டுமென்று மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற ஆசானாகவும் அமைந்திருக்கிறது. காப்பியத்தினுடைய பல்வேறு பணிகளில் அறிவுறுத்தல், பயிற்றுவித்தல் முதலான கடமைகளும் இருக்கின்ற காரணத்தினால், தன்னுடைய காப்பியத்தில் தொடக்கத்திலேயே இதனைச் சொல்வதன் மூலம் சோழப் பேரரசில் எப்படிச் சமுதாயம் அமையவேண்டும் என்பதைக் கவிஞன் கற்பனை மூலம் கண்டான் என்று நினைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. அதுமட்டு மன்று. இந்தச் சமுதாயத்தை அமைக்கும்போது, நாட்டு வருணனை, மக்கள் வருணனை என்ற இரண்டையும் சொல்லும்போது தமிழ் இலக்கியத்தில் மட்டு மல்லாமல், ஏனைய மொழிக் காப்பிய இலக்கியங்களிலும் காணப்படாத சில புதுமைகளைக் கவிச் சக்ரவர்த்தி தன் காப்பியத்தில் புகுத்துகிறான். சங்க இலக்கியங்களில் வரும் இயற்கை வருணனை, மக்கள் வருணனை என்பவற்றுள் தன்மை நவிற்சி அணியே இடம் பெற்றுள்ளமையைக் காணலாம். மருத நில மக்கள், நகர மக்கள் என்ற வேறுபாட்டை மதுரைக் காஞ்சி முதலிய பாடல்களில் காணலாமேனும், எப்படி வாழ்ந்தார்களோ அதனை அப்படியே கவிஞர் பாடியிருப்பதைக் காண முடியும். 15, 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் மூர் (1477-1535) ‘உட்டோப்பியா’ (UTOPIA) என்ற பெயரில் ஒரு கற்பனை நாட்டைப் படைக்கிறார். ‘உட்டோபியா’வில் ஒரு நகர அமைப்பு, |