அந்நகரில் வாழ்கின்ற உழவர், தொழிலாளர் முதலியோர் வாழ்க்கை முறை, நீதி பரிபாலனம், ஒருவருக்கொருவர் நட்புக் கொண்டு வாழுமியல்பு, பிறரிடம் அம்மக்கள் கொள்ளும் உறவுமுறை போல்வனவற்றைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். இவர் (தாமஸ் மூர்) எந்த அளவு கம்பனைப் பின்பற்றிச் செல்லுகிறார் என்பது கற்று மகிழ வேண்டிய பகுதியாகும்,. நிலம், பொழுது இரண்டனையும் முதற்பொருள் என்று தொல்காப்பியர் கூறியிருப்பினும், நாடு என்று சொல்லும் பொழுது ஏனையோரைப் போல இத்தமிழர்கள் நிலம், இயற்கை என்பனவற்றை முதன்மையாகக் கொள்ளவில்லை என்று நினைய வேண்டியுள்ளது. ‘நாடு ஆக ஒன்றோ; காடு ஆக ஒன்றோ; அவல் ஆக ஒன்றோ; மிசை ஆக ஒன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே’ (ஒளவையார்-புறநா.187) இப் புறப்பாடல் மூலம் அவ்வளவு பழைய காலத்திலேயே ஒரு நாட்டின் சிறப்பு அங்கு வாழும் மக்களைப் பொறுத்தது என்பதனை இத்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்று அறிய முடிகின்றது. நாட்டில் வாழுகின்ற மக்களும், அரசர்களும் செம்மை வழி நிற்கவில்லை என்றால் பிற வளங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றால் பயனில்லை என்று மற்றொரு புறப்பாடல் கூறுகின்றது. ‘வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர் இனியே என்ஆவது கொல் தானே-கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கி, தண்புனல் பாயும் யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகந்தலை நாடே’ (புறநா.63) இந்த அடிப்படையில் பார்த்தால், ‘நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல நாட வளந்தரு நாடு’ (திருக்குறள் 739) என்று வள்ளுவப் பேராசான் கூறும்போது ‘நாடா வளத்தன’ என்பதற்கு அதிக முயற்சியில்லாமல் பெரும் பயனைத் தரக்கூடியது என்று உரை ஆசிரியர்கள் பொருள் கூறினாலும், மேலும் ஆழமான பொருள் உண்டோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. |