எனினும், எழுதுபவர்கள் தத்தம் முத்திரையை ஒரேவழி பதித்துள்ளனர் என்பதும் உண்மைதான். இவ்வெளியீட்டுக்குப் பலகாலம் முன்னர் வெளிவந்துள்ள திரு. வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் நூல் நிலையப் பதிப்பும் இன்று கிடைக்காவிடினும் சிறந்தவை என்ற காரணத்தால் அவற்றைத் தேவை உள்ளபோது சில இடங்களில் இவ் உரையாசிரியர் குழு ‘பொன்னேபோல் போற்றி’ எடுத்துக் கொண்டுள்ளது. உரை, விளக்கம், மேற்கோள், இலக்கணக் குறிப்பு என்ற வகையில் முதல் 450 பாடல்கள் எழுதப்பெற்றுள்ளன. கம்பனுடைய பாடல்களில் எவ்வளவு சிறந்த இலக்கணக் குறிப்புகள் உள்ளன என்று எடுத்துக்காட்டாகவே அவ்வாறு விரிவாக எழுதியுள்ளோம்,. பல பிரதிகளில் காணப்பெற்று, சில பிரதிகளில் காணப்பெறாத பாடல்கள்* / (உடுக்குறி) இடப்பெற்றன. எல்லாப் பிரதிகளிலும் இருப்பினும் - மர்ரே அண்டு கம்பெனி, சென்னைக் கம்பன் கழகம் ஆகிய இரு பதிப்புகளிலும் இருப்பினும் பதிப்பு ஆசிரியர் குழு ஏற்றுக் கொள்ளாத பாடல்கள் (வாட்குறி) இடப்பெற்றன. இக்குறிப்பிட்ட பாடல்கள் அனைத்துப் பிரதிகளில் இடம் பெற்றிருப்பதனாலேயே இந்நூலிலும் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் பதிப்பாசிரியர் குழு ஏற்றுக்கொள்ளவில்லை; இவை கம்பன் பாடல்கள் அல்ல என்பதும் அவர்தம் கருத்தே. இவ்வாறான கருத்து மாறுபட்டுப் பாடல் குறி இடப் பெற்றன. பதவுரைக்குப் பின்னர்ப் பல பாடல்களுக்கு விளக்கம் என்ற பெயரில் அவ் உரையில் கண்டுள்ளவற்றைத் தொகுத்துத் தந்துள்ளோம். எளிதாக அமைந்த பிற பாடல்களுக்கு இவ்விளக்கம் இரா. |