பிரபந்தத்திலேயே துளையமாடியவன் கவிச் சக்ரவர்த்தி கம்பநாடன். குழந்தைச் செல்வமே இல்லாத பெரியாழ்வார் தமிழுலகத்தில் பிள்ளைத் தமிழ் தோன்றுவதற்கு வித்திட்டவர் என்பதை மறக்க முடியாது. கண்ணனைக் குழந்தையாக்கி அவர் பாடுகின்ற பாடல் ஒரு முறை கற்றாரையும் உலுப்பிவிடக்கூடிய அளவு அற்புதமான உணர்ச்சி நிரம்பியது. அதை நன்கு படித்து மகிழ்ந்திருக்கக் கூடிய கம்பன், அதைப் பயன்படுத்தி இராகவனுக்கு குழந்தைப் பருவப் பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கலாம். பாடாமல் விட்டுவிட்டான் என்பதை அறிய முடிகிறது. பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான். அப்படிக் கல்வி கற்கும்போதே அவன் மேட்டுக்குடி மகனாக - அரச மகனாக வாழவில்லை என்பதையும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளவனாக வாழ்ந்தான் என்பதையும் ஒரு பாடலில் வைத்துக் காட்டுகிறான். தெருவில் வருகின்றவர்களையெல்லாம் சந்தித்து ‘எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன் முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா எது வினை இடர் இலை இனிது நும் மனையும் மதி தரு குமரரும் வலியர்கொல்’ எனவே (கம்பன், 311) உசாவுவான். இப் பாடலில் பொதுமக்களோடு எப்படி இரண்டறக் கலந்து பழகுகிறான் என்பதைக் கவிச்சக்ரவர்த்தி வைத்துக் காட்டுவது ஏனைய இலக்கியங்களில் காணாத புதுமையாகும். அதற்கடுத்தபடியாக வசிட்டரிடத்தில் கல்வி கற்ற அவன் விசுவாமித்திரரோடு செல்லுகின்றான். அங்கே தாடகை எதிர்ப்படுகின்றாள். மிக நீண்ட பரம்பரையிலே சில அடிப்படையான கொள்கைகள், பண்பாடுகள் போற்றி வளர்க்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சுத்தவீரன் பெண்களைக் கொல்லக் கூடாது என்பதாகும். அந்த மரபில் வளர்ந்தவனாகிய இராகவனுக்கு தாடகையைக் கொல்வது என்பது நினைக்க முடியாததாக அமைகின்றது. இந்த நிலையில் விசுவாமித்திரன் மிக அற்புதமான பல காரணங்களைக் காட்டி ‘இவள் பெண்ணே அல்லள் - பெண் உருவத்திலுள்ள அரக்கி’ என்று எவ்வளவு சொன்னாலும், ‘பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்’ (374). இப்போது விசுவாமித்திரன் பேசுகிறான். ‘ஐயா காழ்ப்புணர்ச்சியோடு, வெறுப்புணர்ச்சியோடு, அவள்மாட்டுக் கொண்ட சின உணர்ச்சியோடு நான் இதைச் சொல்லவில்லை. |