சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன். தர்மம் எது என்பதை நன்கு பார்த்துத்தான் சொல்கின்றேன். ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன். எந்த யோசனையும் வேண்டா! ‘ஆறி நின்றது அருள் அன்று அரக்கியைக் கோறி’ (382) எனக் காரணம் கூறி இவளைக் கொல்க என்று கட்டளையிடுகின்றான். இங்கு இராமன் தர்மசங்கடமான நிலையில் அகப்பட்டுக் கொள்கிறான். அவன் பரம்பரையில் வந்த, ரத்தத்தில் ஊறிய பண்பாடு பெண்ணைக் கொல்லக் கூடாது என்று சொல்கிறது. எதிரிலே இருக்கிற விசுவாமித்திரன் தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவன் என்று தசரதன் கட்டளை இட்டு அனுப்பினான். ஆதலால், இந்த நான்கு இடமும் ஒன்றாக இருக்கிற இந்த விசுவாமித்திரன் இப்போது ‘கோறி’ என்று கட்டளை இடுகிறான். இந்தத் தர்மசங்கடத்தில் அகப்பட்ட இராகவன் மிகச் சிறந்த முறையில் ஒரு முடிவுக்கு வருகின்றான். இதில் தன்னுடைய விருப்பு வெறுப்பு என்பதைக் காட்ட விரும்பாத இராகவன் - ‘கடமை’ என்ற உணர்ச்சியின்பாற்பட்டு, தான் என்பதைப் புறத்தே தள்ளி வைத்து விடுகின்றான். மிக அற்புதமாகப் பேசுகிறான். ‘ஐயா .................................அறன் அல்லவும் எய்தினால் அது செய்க என்று ஏவினால் மெய்ய நின் உரை வேதம் எனக் கொடு செய்கை அன்றோ அரம் செயும் ஆறு’ (383) ‘நிறைவேற்றுவதுதான் என்னுடைய கடமை’ என்று முடிக்கின்றான். எனவே, தர்மசங்கடமான நிலை வரும்போது மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எப்படி இராகவன் முடிவெடுக்கின்றான் என்பதை மிக அற்புதமாக வைத்துக் காட்டுகிறான் கம்பநாடன். காரணம் முதன்முதலாக அரச குமாரனாகிய இராகவன் எப்படிப் பிற்காலத்தில் வளரப்போகின்றான், எப்படிப் பிரச்சனைகளைச் சமாளிக்கப் போகிறான் என்பவற்றை நாம் அறிந்துகொள்வதற்கு முதல் வாய்ப்பாகும் இது. |