35

அவன்     யார்    என்பதை    நமக்கு   எடுத்துக்  காட்டுகின்றன.
“வல்லையாயின்  வாங்குதி  தனுவை”  என்று  சொன்னவுடன்  அந்த
வில்லைக் கையில் வாங்குகிறான்.

பரசுராமன்  என்ன  கருத்திலே  ‘வாங்குதி’  என்று  சொன்னான்
என்றால்,  இந்த  வில்லைக் கையில் வாங்கக்கூட யாருக்கும் தைரியம்
இல்லை  என்ற  எண்ணத்தில்,  ‘உனக்கு  உடம்பில் பலம் இருந்தால்,
மனத்தில் தைரியம் இருந்தால் இந்த வில்லைக் கையில் வாங்குவாயாக’
என்று  சொன்னான்.  ‘வாங்குதி’  என்ற தமிழ்ச் சொல்லுக்கு இரண்டு
பொருள்கள்  உண்டு.  ‘கையில்  வாங்குதல்’  என்பது  ஒரு பொருள்.
‘வளைத்தல்’ என்பது மற்றொரு பொருள்.

முதல்  பொருளில்தான்  பரசுராமன்  வில்லைக்     கொடுத்தான்.
ஆனால்,  பெற்ற இராகவன் இரண்டாவது பொருளும் வெளிப்படுகின்ற
முறையிலே  வில்லை  வளைத்துவிட்டான்.  வில்லை வளைத்ததுமட்டு
மன்று.  வளைத்து  நாணேற்றி  இறுதியாகப்  பேசத் தொடங்குகிறான்.
இராமன் பரசுராமனிடம் பேசிய நீண்ட தொடர்கள் இவைதாம்.

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை’

ஆகவே   மற்றொரு  அரசனாகிய    நான்   உனக்குத்  தண்டனை
கொடுப்பது தகுதியாகும். பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை
என்பது  முதல்  வாக்கியம்.  ஆகவே,  தண்டிப்பதற்கு நான் உரிமை
உடையவன் என்பது ஒரு பொருள்.

இனி  அடுத்தபடியாக,  வேத  வித்து  ஆய மேலோன் மைந்தன்
என்றாலும்  நீ  விரதம் பூண்டாய் ஆதலின் கொல்லல் ஆகாது என்ற
இந்த    மூன்று    வாக்கியங்களில்   இராமனுடைய   உயர்வையும்,
பரசுராமனுடைய    மனப்பான்மையையும்    நாம்   அறிந்துகொள்ள
முடிகின்றது.  வேதவித்து  ஆய  மேலோன்  மைந்தன்  நீ. ஆகவே,
உன்னை      மன்னிக்கின்றேன்.       அதுமட்டுமன்று,     விரதம்
பூண்டாய்-தவக்கோலம்   கொண்டிருக்கிறாய்.   ஆகவே,   உன்னைக்
கொல்லக் கூடாது.

‘ஆதலின் கொல்லல் ஆகாது’

என்று     புன்சிரிப்பு  மாறாமல்,  இராமன்  பேசுவதையும் சினத்தின்
எல்லையிலே  நிற்கின்ற  பரசுராமனையும்  நம்முடைய மனக்கண்ணால்
பார்க்கின்றோம்.