மிகச் சிறந்த முறையில் அரும்பத முதலியவற்றின் அகராதி தொகுத்துத் தரப்பெற்றுள்ளது. பாடல்களுக்குத் தொடர் எண்கள் தரப்பெற்றுளமையால் இவ்வரும்பத அகராதிச் சொற்களுக்கும், தொடர்களுக்கும் பக்க எண் தரப்பெறவில்லை; பாடல் தொடர் எண்களே தரப்பெற்றுன. தம் பல்வேறு அலுவல்களுக்கு இடையே உரை எழுதுதல் போன்ற பல் பணிகளைச் சலிப்பின்றிச் செய்து முடித்த உரையாசிரியர் அனைவர்க்கும் நன்றி உரியதாகும். ஏறத்தாழ 40 இராமயண நூல்களுக்கு மேலும் பார்த்து, பால காண்டத்தில் அவற்றுள் இருக்கும் ஓர்மை, முரண், விடுபாடுகள் ஆகியவற்றை எடுத்து விளக்குவதுடன் மிகப் பழமையனவாகிய நாடொடிப் பாடல்களையும் (ஹிந்தி போன்ற மொழிகளில் உள்ளன) இவற்றுடன் ஒப்புநோக்கி மிக அற்புதமான முறையில் ஒப்பாய்வு செய்துள்ளார் டாக்டர் அ.அ. மணவாளன் அவர்கள். இத்தகைய ஒப்பாய்வு இதுவரை எவரும் எவ்வளவிலும் செய்யாத ஒரு புதிய முயற்சியாகும். இதுபோலவே பிற காண்டங்களுக்கும் இப்பணி செய்ய ஏற்றுக்கொண்டுள்ளார். டாக்டர் அ.அ. மணவாளன் அவர்களுக்குப் பதிப்புக் குழு நன்றி உடையதாகும். இவ் உருள் பெருந் தேர்க்கு அச்சாணி ஆகவும், ஆணிவேராகவும் உள்ளவர் இருவர். அவர் தாம்: நல்லாசிரியர் இ. வேங்கடேசலு அவர்கள் டாக்டர் ம. ரா. போ. குருசாமி அவர்கள். நேர்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் பொறுமையோடு சந்தித்து, அவற்றிற்குத் தீர்வு காணும் இவ்விருவர்க்கும் சக்ரவர்த்தித் திருமகன் திருவருள் இயைவதாக. பல காலமாக உரையின்றி இருந்த இராமாயணத்துக்கு இப்பொழுது உரையிட்டு வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ள கம்பன் அறநிலைக்கும், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்க்கும் தமிழகம் என்றும் கடப்பாடுடையது. |