இப்பொழுது வேறு ஒன்றும் சொல்ல முடியாத நிலையில், இமயமலை உயரத்தில் இருந்த பரசுராமன் கடுகாகச் சிறுத்து விடுகிறான். சாதாரண மனிதனாக நின்ற இராகவன் இமயமலை அளவுக்கு உயர்ந்துவிடுகிறான். ஆகவே, ஸ்திதப்பிரக்ஞ மனோநிலை என்பதை வெளிக்காட்டுவதற்கு மிகச் சிறந்த இடமாக இதனைக் கம்பன் வைத்துக் காட்டுகிறான். பரசுராமன் எதிரே, ‘வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய், ஆதலின் கொல்லல் ஆகாது’ என்று கூறிய இராமன் நிறுத்தினான். ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று பரசுராமன் நினைக்கின்ற நிலையில் ஒரு வார்த்தை சேர்க்கின்றான் இராமன். ‘அம்பு இது பிழைப்பது அன்றால்’ ‘அம்பைப் பூட்டிவிட்டேன். இனி அந்த அம்பைச் சும்மா எடுத்துத் தூணியிலே போடுவது இயலாத காரியம். இந்த அம்பு ஏதாவது ஒன்றை அழித்து விட்டுத்தான் வரும். ஆகவே, யாரை, எதனை, எவ்வாறு அழிக்க வேண்டுமென்று சொல்வதை உனக்கே விட்டு விடுகிறேன்’ என்று சொல்லுகிறான். ‘அம்பு இது பிழைப்பது அன்றால் யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின்’ என்றான். அப்போது பரசுராமன் ‘என்னுடைய தவத்தை யெல்லாம் உன்னுடைய அம்புக்கு இரையாக்குகிறேன்’ என்று சொல்லும்போது பரசுராமன் வீழ்ச்சி, இராமனின் உயர்ச்சி என்ற இரண்டையும் கம்பன் அற்புதமாக வைத்துக் காட்டுகிறான். ஆகவே, இராமகாதையில் உள்ள ஆறு காண்டங்களில் இராகவனை வளர்த்துக் காட்டுவதற்குப் பதிலாக, பாலகாண்டத்திலேயே தாடகை வதைப் படலம், பரசுராமப் படலம் என்ற இரண்டு படலங்களில் இராமன் எத்தன்மையானவன், எத்தகைய மனோ நிலை உடையவன், என்ன பண்பாட்டை உடையவன், சமதிருஷ்டியை எப்படிப் பெற்றிருக்கிறான், மெய்யுணர்வு பெற்றவனாக எப்படி வாழ்கிறான் என்பதை எடுத்துக் காட்டுவதன் மூலம் பின்னே இவன் என்னென்ன செய்யப்போகிறான் என்பதை நமக்கு அற்புதமாக வைத்துக் காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி. இனி, நான்காவதாக உள்ள தொகுப்பைப் பார்க்க வேண்டும். சந்திரசயிலப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், நீர்விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம் முதலிய படலங்கள் காப்பியத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் துணை புரியவில்லை என்பது உண்மைதான். இந்த ஐந்து படலங்களையும் |