37

எடுத்துவிட்டால்  எந்தவிதமான  குறைபாடும்   இல்லாமல்  காப்பியம்
நடைபெறும்.  அப்படியிருக்க மாபெரும்  கவிச்சக்கரவர்த்தி ஏன் இந்த
ஐந்து   படலங்களையும்   சேர்க்க   வேண்டும்  என்று  நினைப்பது,
வினாவுவது நியாயமானவையேயாகும்.

இரண்டு  காரணங்கள்தாம் சொல்ல முடியும். - பிற்காலத்திலே ஒரு
காப்பியம்   என்றால்    காப்பியத்   தலைவன் புனல்  விளையாட்டு,
மலைவளம் காணல் முதலானவை யெல்லாம் இருக்க  வேண்டு மென்று
இலக்கணம்  வகுத்து  இருக்கிறது.  அந்த இடைக்காலத்தில் தோன்றிய
இலக்கணத்தைத் திருப்திப்படுத்துவதற்காகக் கம்பன்  பாடினான் என்று
சொல்வதிலே  ஒரு  குறை  ஏற்படுகிறது.  காப்பியத்  தலைவ னாகிய
இராமன்  இந்த  ஐந்து  படலத்திலும்  இல்லவே  யில்லை.  ஆகவே,
காப்பியத் தலைவன் புனல் விளையாட்டு, முதலானவற்றில் ஈடுபட்டான்
என்று   பாடுவது   தான்   காப்பியம்   என்றால்,  அதற்கு  இங்கே
இடமில்லை. பின்னே ஏன் இதை இங்கே சேர்க்கின்றான்?

ஏதோ ஒரு கால ஓட்டத்தில் மக்கள் மனத்தில் ஒரு கிளுகிளுப்பை
உண்டாக்க  வேண்டும்  என்று  இந்த  நான்கைந்து  படலங்களையும்
பாடியிருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டு
மன்று.  பல்லவ சாம்ராஜ்யம் மிகப் பெரிதாக வளர்ந்திருந்த நிலையில்
மற்றது  எப்படி  இருந்தாலும் தமிழ் மக்களைப்  பொறுத்தமட்டில் ஓர்
இன்ப  வாழ்க்கை,  இன்ப  வேட்டையில்  புகுந்துவிட்டார்கள் என்று
நினைக்க வேண்டியிருக்கிறது.

அதுபோலச்     சோழர்கள்   காலத்திலும்   அது   தொடர்ந்து
நடைபெற்றிருக்கிறது.  ஆகவே, மக்கள் குறிக்கோள் இல்லாமல் இன்ப
வேட்டையில்   தலைதெறிக்கச்  செல்லுகின்ற  சூழ்நிலை  அப்போது
இருந்திருக்க   வேண்டும்.  அதைப்  பிரதிபலித்துக்  காட்டுகின்றவன்
போல இங்கே தமிழ்மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கோசல
மக்களைக்   காட்டுவதன்   மூலம்   கம்பன்  காட்டினானோ  என்று
நினைக்கத்   தோன்றுகிறது.   அன்றியும்,  காப்பியத்  தலைவனாகிய
இராமன்  தயரதன்  பல  மனைவியரை  மணந்து  இன்ப  வாழ்க்கை
வாழ்ந்தான் என்று அறிகிறோம்.

‘கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர்போக
பௌவம்’ (172)

என்று கம்பன் பாடிவிட்டான்.

ஆகையால்,   செல்வரில்  சிலர்  இப்படியும்  வாழ்ந்தனர்  என்று
எடுத்துக் காட்ட இப்படலங்களை அமைத்தானோ என்று  நினைப்பதில்
தவறில்லை