38

இம்மாதிரி அவர்கள் வாழ்ந்ததனால்தால்தான் 7 ஆம் நூற்றாண்டில்
தோன்றிய   அப்பர்பெருமான்   தமிழ்நாடு   முழுவதையும்   சுற்றிப்
பார்த்துவிட்டு,  ‘மக்கள்  தேனும்  பாலும்  பெருக்கெடுத்து  ஓடுகின்ற
முறையிலே  மிகச்  சிறப்பாக வாழ்கிறார்கள். ஆனால், என்ன பயன்?
குறிக்கோள்  இல்லாமல்  வாழ்கின்றார்கள்’  என்பதைச்  சொல்லாமல்
சொல்லிக் காட்டுகின்றார்.

‘குறிக்கோள் இலாது கெட்டேன்’

என்று.

திருநாவுக்கரசருடைய தேவாரத்தில் வருகின்ற இந்த  ஒரு அடியை
மனத்தில் வைத்துக்கொண்டுதான்

‘ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்’

என்று ஆரம்பிக்கின்றான் கம்பன் என நினைக்கின்றோம்.

அதே  நேரத்தில்  குறிக்கோள் இல்லாமல் கெடுவதற்குக் காரணம்
என்ன? இன்ப வாழ்க்கை, இன்பவேட்டை  என்பனவாம். அந்த இன்ப
வாழ்க்கை,  இன்பவேட்டை  என்ன  என்பதை  விஸ்தாரமாக நமக்கு
விளக்குவதற்காகத்தான்  இந்த  ஐந்து படலங்களையும் இங்கே கம்பன்
வைத்திருக்கிறான் என அறிய முடிகின்றது.

இந்தப்  படலங்கள்  காப்பிய  வளர்ச்சிக்கு உதவி பண்ணவில்லை
என்றாலும்,  காப்பியம்  என்பது அது தோன்றுகிற காலத்திலே உள்ள
மக்கள்  வாழ்க்கை முறையை, மனக் கருத்தை, குறிக்கோளை, எண்ண
வோட்டங்களை,  சிந்தனையைப்  பிரதிபலிக்கின்ற  ஒன்று என்பதற்கு
எடுத்துக்காட்டாக அமைகின்றது என்பதைக் காணுகின்றோம்.

ஆகவே,  பாலகாண்டம்  23  படலங்களில்  தமிழ்நாட்டின் நிலை,
தமிழ்மக்களின்  நிலை, காப்பிய நாயகனுடைய  தோற்றம், அவனுடைய
வளர்ச்சி,   அவன்   எப்படி   உயர்ந்து   வருகின்றான்  என்பதைக்
காட்டுவதோடு அதுவரையில் எந்தப் புலவனும் காணாத முறையில் ஒரு
குறிக்கோள்  தன்மைபெற்ற சமுதாயத்தை, உடையார்-இல்லார் இல்லாத
ஒரு   சமுதாயத்தை   எல்லோரும்   எல்லாப்   பெரும்  செல்வமும்
எய்தியிருந்தால்  எப்படி  வாழ்வார்கள்  என்கிற ஒரு சமுதாயத்தைக்
கம்பன் அமைத்துக் காட்டியிருக்கிறான்.

ஆக  பால  காண்டம் என்பது கம்பனுயை ஆறு காண்டங்களிலும்
இது  ஏதோ ஒதுக்கிவிடப்படக்கூடிய  ஒன்று  என்று  இல்லாமல் மிக
அற்புதமான  பல  நுணுக்கங்களைப்  பெற்றிருக்கின்ற  காண்டம் என
அறிய முடிகின்றது.