39

இராமயண பால காண்டங்கள் -ஓர் ஒப்பியலாய்வு

(முனைவர் அ.அ. மணவாளன், பேராசிரியர்,
தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)

(முன்னுரை  - காண்ட  அமைப்பு  -  காப்பிய  நோக்கம் - காப்பியத்
தொடக்கம் - நாட்டு நகர வருணனைகள் - இராமன் பிறப்பு - தாடகை
வதம்  - அகலிகை  சாப நீக்கம் - சீதையின் பிறப்பும் திருமணமும் -
பரசுராமன் எதிர்ப்பு)

இராமாயணம்  என்னும்  பெயருடைய கதைத் தொகுதி தொன்மம்,
இலக்கியம், புராணம், வாய்மொழி இலக்கியம் எனப்  பல வடிவங்களில்
இந்தியா   முழுவதும்   வரலாற்றுக்கு   முற்பட்ட   காலத்திலிருந்தே
வழங்கிவந்துள்ளது. வான்மீகியின் வாயிலாக இலக்கிய  வடிவம் பெறும்
முன்பே இக் கதை தொகுதி தொன்ம வடிவிலும், நாடோடிப் பாடல்கள்
வடிவிலும்   இந்தியாவின்  எல்லாப்  பகுதிகளிலும்  பரவியிருந்ததாக
மானுடவியலாளரிடையேயும்,  சமூகவியலாளரிடையேயும்  ஒரு கருத்து
நிலவி  வருகிறது.  எனினும், முதன் முதலாக எழுத்துருவம் பெற்றதாக
வரலாற்று   வழி   அறியத்   தக்கதாக   நமக்குக்  கிடைத்திருப்பது
வான்மீகியின் இராமாயணம்தான்.

வான்மீகியின் காப்பியம்  எழுந்த  பின்னர்  வடமொழி  முதலான
இருபதுக்கும்  மேற்பட்ட  இந்திய மொழிகளில் இராமாயணம் காப்பிய
வடிவம் பெற்று வழங்கிவருகிறது. இவற்றுள் சமய வேறுபாடு பற்றி ஒரு
மொழியிலேயே  பல  காப்பியங்கள்   எழுந்திருக்கவும்  காண்கிறோம்.
இராமாயணக்   கதைக்   கூறுகள்   இப்  பல்வேறு  மொழி,  சமயக்
காப்பியங்களில்   எவ்வாறு   சில   இடங்களில்  வேறுபடாதும்,  சில
இடங்களில்  வேறுபட்டும்  வழங்கி  வருகின்றன  என்றும்,  இவ்வாறு
நிகழ்ந்துள்ள  வேறுபாடுகளுக்குரிய  சமுதாய,  பண்பாட்டு, இலக்கியக்
காரணிகள் எவை என்றும் ஒப்பியல் அடிப்படையில் காண விழைவதே
இவ் ஆய்வின் நோக்கமாகும்.