ஒரு பண்பாட்டின் உயிர்ப்புக் கூறு ஒரு நாட்டின் வாழ்க்கை நீரோட்டத்தின் அடியூற்றாகத் தொடர்ந்து இயங்கினாலும், அரசியல், வரலாறு, சமுதாயம், அயற் பண்பாட்டுக் கலப்பு என்னும் இயக்கவியல் வாழ்வுக் கூறுகளால் அப்பண்பாடு புறத்தே சிதைவுற்று வேறுபட்ட பல பண்பாடுகள் போல் தோன்றுவது இயற்கை. இதற்கேற்ப இந்திய நாடு, பரத கண்டம் எனப் பண்டு தொட்டே பூகோள அடிப்படையில் ஒரு நாடாகக் கூறப்பட்டு வரினும், அதன் தென்பகுதியும், வடமேற்குப் பகுதியும், கிழக்குப் பகுதியும் மையப் பகுதியான கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்து மொழி, தட்பவெப்பம், உணவு, உடை, பழக்க வழக்கம், வேற்றவர் வரவு போன்ற புறவாழ்வியல் கூறுகளால் அங்கங்கே அவ்வப்போது சிற்சில மாற்றங்களைப் பெற்று வந்திருப்பது கண்கூடு. இதன் விளைவாக இந்திய மொழியில் எழுந்துள்ள பல்வேறு இராமாயணக் காப்பியங்கள் இம்மாற்றங்களை எவ்வாறு கலை வடிவில் வெளிப்படுத்துகின்றன என்று ஒப்பிட்டு ஆராய வேண்டும் என்னும் ஆர்வமும் இங்கு நோக்கமாக அமைகிறது. இந் நிலையில், கிடைக்கும் தரவுகட்கேற்ப, இலாவோசிய, கம்போடிய, மலேசிய, சிங்கள, சயாமிய இராமாயணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன, இவ் வாய்வின் விளைவாகக் கண்டறியப்படும் வேறுபாடுகள், மொழி, இலக்கிய, பண்பாட்டு உயர்வு தாழ்வுகளை மதிப்பீடு செய்வன அல்ல. ஒப்பியலாய்வு தனிமங்களின் மதிப்பீட்டில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக ஒரு பொருண்மையின் முழுமைக்கு அவை ஆற்றும் பங்கினை, “இன்னது இற்று” என்னும் வாய்பாட்டில் கூறும் தன்மையது. கண்டறிந்து கூறப்பெறும் வேறுபாடுகளால் ஒரு மொழியின்கண் எழுந்த இலக்கியத்தின் அல்லது அதற்குரிய பண்பாட்டுக் கூறின் சிறப்போ, சிறப்பின்மையோ படிப்போரால் உய்த்துணரப்படுதல் தவிர்க்க இயலாததாயினும், அவ் உய்த்துணர்வு தானும் உணர்வோர் வயத்ததேயன்றி, இவ் ஆய்வாளன் அதில் பங்கு பற்றுவானல்லன் என்பது நன்கு தெளியத் தக்கதாம். இராமாயண நூல்கள் இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் பற்பல இராமாயணங்கள் தோன்றியிருப்பினும், கீழ்க்காணும் நூல்கள் மட்டுமே அவற்றின் வழக்கு மிகுதியும், இலக்கியச் செவ்வியும் நோக்கித் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பெற்றன. இவற்றுள் சில ஆழமாகவும், விரிவாகவும், பயன்படுத்தப்பெறுவன; பல சுருக்கமாகவும், குறிப்பாகவும், வெறுன் சுட்டாகவும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. |