சில நாட்கள் தொடர்ந்து குன்னூரில் கூடி அளவளாவியது. காலையிலும் மாலையிலும் குறிஞ்சிக் குன்னூரிலே உலாவப் போவது இக்குழுவின் வழக்கம். ஒரு நாள் காலையில் உலாவின்போது ‘கம்பராமயண உரை வெளியிடுவோர் இல்லையே’ என்று ஒருவர் இரங்கினார். அவர் வாயை மூடுமுன்னரே நல்லாசிரியர் இ. வேங்கடேசலு அவர்கள் “இந்த கணமே நான் என் பெற்றோர்கள் எல்லப்பா - ரெங்கம்மாள் நினைவாக ஒரு லட்ச ரூபாய் தருகிறேன். மேலும் வேண்டியன எல்லாம் செய்வோம்” என்று உறுதியாகக் கூறினார். இப்படிக் குன்னூர் மலையிலே பிறந்தது இந்தத் திருப்பணி. அந்தக் குழுவின் தீவிர உறுப்பினரான செந்தமிழ் அருட்செம்மல் டாக்டர் பி.எஸ்.ஜி.ஜி. கோவிந்தசாமி நாயுடு அவர்கள் இந்தத் திட்டத்துக்குப் பேரூக்கம் தந்தார். உடனே செயல்படத் தூண்டினார். கம்பராமாயண விளக்கவுரை முயற்சி இவ்வாறு கருக்கொண்டது. கரு வளர்ந்தது. குன்னூர்க் குழு கோவை வந்ததுமே செயல்படலாயிற்று. பேராசிரியர் அர. சு. நாராயணசாமி அவர்கள் நினைவு நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் இப்பணிக்கு பயன்பட வழி வகுத்தார் நல்லாசிரியர் வேங்கடேசலு. செந்தமிழ் அருட்செம்மல் கம்பராமாயண உரைக் குழுவை அமைப்பதற்கு உரிய பணிகளைத் தொடங்கினார். பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம், கம்பன் அறநெறிச் செம்மல் ஜி. கே. சுந்தரம் உள்ளிட்ட கம்பன் ஆர்வலர் பலரையும் ஒரு கூட்டத்துக்கு அழைத்தார். 16.5.1992இல் அந்தக் கூட்டம் கூடிற்று. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருபது பேர்க்குமேல் வந்து கூடினர். ஆனால், அந்தோ, அன்று அதிகாலையில் செந்தமிழருட்செம்மல் இறைவன் திருவடி அடைந்துவிட்டார். கூட்டம் நடத்துவதா என்ற ஐயம் எழுந்தபோது, செந்தமிழருட்செம்மலின் ஆன்மா அமைதிபெறுவதற்கே கூட்டத்தை நடத்தி, அவருடைய ஆவலை நிறைவேற்றவேண்டும் என்று ஜி.கே.எஸ். உறுதியாகக் கூறினார். கூறியதோடு மட்டுமன்றி, அன்று ஆறுமணி நேரத்துக்கு மேலாகக் கம்பராமாயண உரைக்குழு அமைப்பதிலும், அதன் விவாதங்களிலும் கலந்துகொண்டார். கம்பராமாயண ஆர்வலர்களும் நூல் வெளியீட்டாளர்களும் நெடிய விவாதங்களின் பின்னர் உரையாக்கம், வெளியீடு பற்றி முடிவு செய்தனர். |