கூட்டம் நடத்துவதா என்று ஐயம் எழுந்தபோது, செந்தமிழருட் செம்மலின் ஆன்மா அமைதி பெறுவதற்கே கூட்டத்தை நடத்தி, அவருடைய ஆவலை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.எஸ். உறுதியாகக் கூறினார். கூறியதோடுமட்டு மன்றி, அன்று ஆறு மணி நேரத்துக்கு மேலாகக் கம்ப ராமாயண உரைக்குழு அமைப்பதிலும், அதன் விவாதங்களிலும் கலந்துகொண்டார். கம்ப ராமாயண ஆர்வலர்களும் நூல் வெளியீட்டாளர்களும் நெடிய விவாதங்களின் பின்னர் உரையாக்கம், வெளியீடு பற்றி முடிவு செய்தனர். செந்தமிழருட்செம்மலின் முதலாண்டு நினைவையொட்டி முதற்காண்ட உரை வெளிவர வேண்டும் எனவும், தொடர்ந்து கம்பராமாயண உரைப்பணியை நிறைவுசெய்ய வேண்டும் எனவும் முடிவுகள் செய்யப்பெற்றன. கம்பன் அறநிலையம் ஏற்றது கம்ப ராமாயண உரை வெளியிடுதல், அதன்பின் அது தொடர்பான ஆய்வுகள் வெளியிடுதல் போன்ற பணிகளைக் கோவை, கம்பன் டிரஸ்டிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பெற்றது. திருமிகு ஜி.கே.எஸ். அவர்களின் அன்பாதரவால் கம்பன் அறநிலையின் ஒரு பணியாக இத் திருப்பணி ஏற்கப்பெற்றது. கம்ப ராமாயண உரைக்குழு, கம்ப ராமாயண உரை நிதிக்குழு, உரையாசிரியர் குழு என மூன்று குழுக்கள் 2.10.92இல் நடைபெற்ற கம்பன் அறநிலைக் கூட்டத்தில் அமைக்கப்பெற்றன. இந்தத் திட்டத்தினை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டதோடு, இதனால் வரக்கூடிய பொறுப்புகளின் சுமை அறிந்து மிகவும் கவனமாக ஜி.கே.எஸ் அவர்கள் செயல்களை நடத்திவருகிறார். தமிழர்களின் நல்வினைப் பயனாய் இன்று கம்ப ராமாயண விளக்கவுரையைக் கம்பன் அறநிலையம் வெளியிடுகின்றது. களப் பணி கம்பன் அறநிலை கம்ப ராமாயண உரைநிர்வாகக் குழு, கம்பராமாயண நிதிக் குழு - இவற்றின் உறுப்பினர்கள் தஞ்சைப் பெரிய கோவிலை உருவாக்கிய மாமன்னன் இராசராசன் போன்றவர்கள். |