கிட்கிந்தா காண்ட முன்னுரை
பேரா. அ.ச. ஞானசம்பந்தன் கம்பனது இராம காதையில் கிட்கிந்தா காண்டம் நான்காவதாகும். மொத்தம் உள்ள ஆறு காண்டங்களில் அயோத்தி, ஆரணியம், கிட்கிந்தை என்ற மூன்று காண்டங்களும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்பற்றிப் பெயர் பெற்றனவாகும். மூலநூலை மிகப் பெரிய அளவில் பின்பற்றிய கம்பநாடன், காண்டப் பெயர்களையும் மூலநூலில் கண்டவண்ணம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளான். காப்பிய வளர்ச்சியில் முதல் திருப்புமையமாக அமைந்தது, கைகேயி வரம் பெறுதலாகும். இரண்டாவது பெரும் திருப்புமை மையம் சூர்ப்பணகை சூழ்ச்சி ஆகும். அதன் பயனாகப் பிராட்டி சிறையெடுக்கப்பட்டவுடன் காப்பிய வளர்ச்சிக்குத் திருப்புமையம் எதுவும் தேவைப்படவில்லை. எனவே, இராகவன் பிராட்டியைத் தேடிச் செல்லுதல், இராவணனிடம் போர் செய்தல், பிராட்டியை மீட்டல் என்ற முறையில் காப்பியம் தங்கு தடையின்றிச் செல்லும், என்றாலும், படிப்பவர்கள், கதைமாந்தர்கள் ஆகிய இரு தரப்பினருள் யாரும் எதிர்பாராத ஒரு தடை இருக்கிறது. 'கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர் பட்ட நல்வலம் பாகம் எய்தும்' வாலியே அந்தத் தடை. அத்தடையை இராகவன் நீக்க வேண்டும். இன்றேல், இராவண வதம் நிகழாது. இத் தடையையும் அதைநீக்கவேண்டிய இன்றியமையாமையையும் அறிந்தவர்கள் இருவர் உளர். கவந்தன் என்ற பூதமும், சவரி என்ற வேடர்குலப் பெருமாட்டியும் சுக்கிரீவனிடம் செல்லும் வழியையும், அவன் நட்பைப் பெறவேண்டிய இன்றியமையாமையையும் இராம - இலக்குவர்க்கு வலியுறுத்திக் கூறுகிறார்கள். வாலியினிடம் அஞ்சி ஒடுங்கி இரலைக் குன்றத்தில் மறைந்து வாழும் சுக்கிரீவனிடம் போகுமாறு சொல்லியது ஏன்? வாலி, சுக்கிரீவன் என்ற இருவரையுமே இராம - இலக்குவர் அறிந்திலர். அப்படி இருந்தும், இராவணனை வெல்லும் ஆற்றல் |