59

     இந் நிகழ்ச்சிகளில் மற்றொரு புதுமையையும் காணமுடிகின்றது. பக்தன்
இறைவனைக் கண்டு உணர்வதையும் இறைவன் பக்தனை
அறிந்துகொள்வதையும் பக்கத்தில் நிற்பவர்கள்கூட அறிந்து கொள்ள இயலாது.
இராமனை யாரென்று நன்கு அறிந்திருந்த இராமானுஜனாகிய
இளையபெருமாள்கூட அனுமனை யாரென்று அறியவில்லை; அறிந்துகொள்ள
முயலவும் இல்லை. 'இச்சிறு வடிவினன் உலகுக்கெல்லாம் ஆணி, கோட்படாப்
பதம் என்றெல்லாம் இராகவன் கூறியும்கூட இலக்குவன் கணிப்பில் எவ்வித
மாற்றமும் ஏற்படவில்லை.  அதனை அறிந்த இராகவன் 'வில்லார் தோள்
இளைய வீர!' (3768) என்று விளித்து, அவனை இடித்துரைக்கும் முறையில்,
இவன் பெருமையை நான் அறிந்துகொண்டேன். நீ அறிந்துகொள்ள
முற்படவில்லை.  போகப்போக அறிந்து கொள்வாய் என்னும் வகையில்,

... ... ... ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை' என்று தம்பிக்குக் கழறி (3769)

என்ற பாடலை அமைக்கிறான் கவிஞன்.

     இதற்கு முந்தைய பாடலில் இலக்குவனைப்பார்த்து இராகவன் 'வில்லார்
தோள் இளைய வீர!' என விளிப்பது கருத்துடை அடைகொண்ட விளியாகும்.
போருக்கு உரிய எவ்வித நிகழ்ச்சியும் நடைபெறாத இந்தநேரத்தில் 'வில் ஆர்
தோள்' என்று விளிப்பது ஒரு காரணம்பற்றியே ஆகும். எதிரே உள்ளவனைக்
கூர்ந்து பார்த்து அவன் யாரென்பதை எடை போட முயலாமல் ஏதோவொரு
பிரமச்சாரி வடிவம் என்றும் அலட்சியமாக நிற்பதும், அவன் தமையன்
'விரிஞ்சனோ? விடைவலானோ?' என்று கூறியபோதும் அதுபற்றிச்
சிந்திக்காமல் இருப்பதும் இராகவனுக்குத் தம்பியினிடம் ஏமாற்றத்தை
உண்டாக்குகிறது.  மறைமுகமாக அவனை இடித்து அறிவு புகட்ட விரும்பிய
பெருமான் 'வில்லையும் புயத்தையும் மட்டும் நம்பிக்கொண்டு அனுபவத்தால்
பெறவேண்டிய அறிவை இளமை காரணமாகப் பெற முயலாமல் தன்
வீரத்தைமட்டுமே நம்பி வாழ்கின்றவனே' என்று பொருள் பொதிந்த
அடைமொழிகளால் இளவலை விளித்துப் பேசுகிறான் இராகவன். இவ்வளவு
சொல்லியும் இலக்குவன் மனத்தில் ஏதும் மாற்றம் இல்லை ஆதலால், அடுத்த
பாடலில் இடத்துப் பேசுகிறான். 'கழறி' என்றால் இடித்துச் சொல்லி என்று
பொருள்படும்.  'இப்பொழுது புரியவில்லையாயினும் நான் சொல்வது
உண்மையென்பதைப் பின்னர்க் காண்பாய்' என்று பேசுகிறான் இராமபிரான்.