காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம், எனா, ஆலம் உண்டவனின் நின்று, அருநடம் புரிகுவான் (3737) வாலி விண் பெறக் காலன் வந்தனன் என்றதோடு அமையாமல், தன் தலைவனாகிய சுக்கிரீவன் எதிரே சிவபெருமான் போன்று நடனம் ஆடினானாம். 'காலன் வந்தனன்' என்ற சொல்லின் பொருளைச் சுக்கிரீவன் அறிவதுடன், அனுமனின் மனநிலையை, மகிழ்ச்சியை, அறிவிக்கும் அவனது நடனம் சுக்கிரீவனை நம்பிக்கை கொள்ளச்செய்தது. சுக்கிரீவனுக்கு ஏவல் கூவல் பணி செய்பவனாகவும், அமைச்சனாகவும் இருந்த அனுமன், தங்கள் கட்சிக்கு இராகவனை அழைத்ததே ஒரு சிறப்பாகும். அவர்களிடம் பேசியதிலிருந்து வாலி - சுக்கிரீவர்களைப்பற்றியோ அவர்கள் பகைமைபற்றியோ சுக்கிரீவன் மனைவியை வாலி கவர்ந்துள்ளான் என்பதுபற்றியோ இராம - இலக்குவர்க்கு ஒன்றும் தெரியாது என்பதை அனுமன் தெரிந்துகொண்டான். புதிதாக வந்தவர்களைச் சுக்கிரீவனிடம் நட்புக் கொள்ளுமாறு செய்வது ஒன்று. ஆனால், வாலியைக் கொன்றாலொழிய இந்நட்பின் உடனடிப் பயனைச் சுக்கிரீவன் அடைய முடியாது. அதே நேரத்தில் நட்புச் செய்துகொண்ட உடனேயே 'என் பகைவன் வாலி இருக்கிறான். அவனைக் கொல்ல வேண்டும்' என்று சொன்னால், இராமன் உடன்படுவானா என்பது ஆராய்ச்சிக்கு உரியது. இந்நிலையில், மாபெரும் அறிவாளியாகிய அனுமன் ஒரு வழி காண்கிறான். மனைவியை இழந்து அவளைத் தேடிஅலைய நெடுந்தூரம் வந்துவிட்ட இராகவன் மனத்தில் தன்னைப் போன்ற அதே துயரத்தை இப்பொழுது நண்பனாகக் கொண்ட சுக்கிரீவனும் கொண்டுள்ளான் என்றாலும் சுக்கிரீவன்மாட்டுப் பரிவும், வாலியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணமும் இராகவனுக்கு வருவது உறுதி. என்றாலும் சுக்கிரீவன் மனைவியை வாலி கவர்ந்தா னென்பதை எப்பொழுது, எங்கே, எவ்வாறு சொல்வது என்பதை ஆராய்ந்து முடிவுகண்ட பெருமை அனுமனுக்கே உரியது. காலம் கருதி இடத்தாற் செய்தால் ஞாலம் கருதினும் கைகூடும் என்பர் வள்ளுவர். அதனை அற்புதமாகக்கையாளுகிறான் அனுமன். இராம - இலக்குவர்களை விருந்துண்ணுமாறு தன் இருக்கைக்கு அழைத்தான் சுக்கிரீவன். அவர்களை அமரச்செய்து தானும் உடன் அமர்ந்து உண்ண, அனுமன் முதலியோர் பரிமாறினர். பெரியோர்களை விருந்துக்கு அழைத்தால் இல்லத்தரசிதான் பரிமாற வேண்டும். பெண் வாடையே இல்லாமல் ஆண்களே பரிமாறுவதைக் கண்ட இராகவன் மனம் மிகவும் கவன்று, நொந்து, |