விருந்தும் ஆகி, அம்மெய்ம்மை அன்பினோடு இருந்து, நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா 'பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய்கொலோ நீயும் பின்?' (3820) என்று கேட்கிறான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தை உண்டாக்கியவன் அனுமனே ஆவான். இராகவன் கேளாமல் தானே வாலியின் வரலாற்றையும் அண்ணன் தம்பி பகைமையையும் தம்பி மனைவியை அண்ணன் கவர்ந்தமையும் கூறினால் அது எந்த அளவுக்கு இராமனைப் பாதிக்கும் என்று தெரியாது. வாலியைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இராகவன் மனத்தில் தோன்ற வேண்டுமேயானால். அதற்குரிய நிலைக்களத்தை அமைக்க வேண்டும். இந்த விருந்தை ஏற்பாடு செய்து ஆண்களே பரிமாறும் சூழ்நிலை உருவாக்கி, இராகவன் மனத்தில் எல்லையற்ற துயரத்தையும் நோவையும் உண்டாக்கி, 'நீயும் பூவையைப் பிரிந்துளாயோ' என்று கேட்குமாறு செய்து அற்புதமான நிலைக்களத்தை உருவாக்கிவிட்டான் அனுமன். இந்த நிலையில் பூவையை இழந்ததற்குரிய காரணத்தையும், அதனைச் செய்தவன் யாரென்பதையும் கூறினால் இராகவன் மனத்தில் வாலியைக் கொன்று சுக்கிரீவன் தாரத்தை மீட்டுத் தருதல்வேண்டும் என்று உறுதிக்கொள்வது நிச்சயமாக நடந்தே தீரும். இந்த மாபெரும் செயலைச் செய்வதன் அனுமனாகிய தொண்டனே ஆவான். இராகவனைக் கண்டபோது தன் எலும்பு உருகுவதாகவும் காதல் மீதூருவதாகவும் கூறியதுடனல்லாமல், இராகவனைப் பற்றித் தன் மனத்தில் தோன்றிய எண்ணம் உறுதிப்படும் வகையில் இராகவனுடைய தடக்கையில் சங்கு சக்கரக் குறி உள என்றும் கண்டவன் அனுமன் ஆவான். அப்படியிருந்தும் மராமரத்தில் அம்பைச் செலுத்தி இராகவனுடைய ஆற்றலை அறியலாம் என்று சுக்கிரீவனிடம் அனுமன் ஏன் கூற வேண்டும்? இராகவனுடைய ஆற்றலில் அனுமனுக்கே ஐயம் வந்துவிட்டதா என்ற வினாத் தோன்றினால் அது நியாயமானதேயாகும். இந்த நிலையில் யாருக்காக எப்பொழுது எந்த நிலையில் அனுமன் இந்த உத்தியைக் கூறினான் என்பதை ஆராய வேண்டும். அவனுடைய தலைவனாகிய சுக்கிரீவன் ஒரு சந்தேகப் பேர்வழி. எவ்வளவு கூறினாலும் சான்றுகள் எடுத்துக்காட்டினாலும், அவனது அடிமனத்தின் சந்தேகம் போவது கடினம். ''வேறுஉள குழுவையெல்லாம் மானுடம் வென்றதன்றே'' (3804) என்று கூறினாலும் வாலியினிடம் உதைபட்டவன் ஆதலாலும் எதிரே நிற்பவர் பலத்தில் பாதியை வாலி பெற்றுவிடுவான் ஆதலாலும் இராமன் வாலியை வெல்லமுடியுமா என்ற ஐயம் அவன் |