அடிமனத்தில் இருந்ததில் வியப்பில்லை. அனுமன் பரம்பொருளின் இலக்கணத்தை, ஆற்றலை அறிந்தவன்; ஆதலால் அனுமன் ஐயம் கொள்ளவில்லை. ஆனால், இவை இரண்டையும் அறியாத காரணத்தால் சுக்கிரீவன் ஐயம் கொண்டது நியாயமானதே ஆகும். இராமனின் ஆற்றலைக் காட்சிப் பிரமாணமாகக் கண்டாலொழியச் சுக்கிரீவன் நம்புவது கடினம். அதை நம்பாதவரையில் வாலியுடன் போருக்குச் செல்வதும் இயலாத காரியம். சுக்கிரீவனிடம் வாலி போரிட்டா லொழிய இராமன் வாலியைக் கொல்வதற்கு இயலாது. எனவே, நுண்மாண் நுழைபுல மிக்க அனுமன், சுக்கிரீவன் மனத்தில் ஒரு நம்பிக்கையை, அண்ணனிடம் போர் செய்யும் துணிவை வரவழைக்க இந்த உபாயத்தைக் கூறுகிறான். மரா மரத்தில் அம்பு எய்து துளைப்பது, இராமனுக்கு எளிய செயல் என்பதை அனுமன் அறிவான். அதனை நேரில் கண்டாலொழியச் சுக்கிரீவன் நம்பமாட்டான். இவ்வாறு செய்வதில் ஒரு சங்கடமும் உண்டு. ''தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்ப்பதுபோல'' எவ்விதக் கைம்மாறும் கருதாமல் வாலியைக் கொன்று, தாரமோடு தலைமையும் தருகிறேன் என்று முன்வந்துள்ள இராகவனுக்கு ஒரு பரீட்சை வைத்தால், அதனை எப்படி ஏற்றுக்கொள்வானோ? அதனால் வருத்தம் அடைவானோ? சினம் கொள்வானோ? 'எனக்கே பரீட்சை வைக்கும் உங்கள் நட்பே வேண்டாம்' என்று சொல்லிவிடுவானோ என்பன போன்ற ஐயங்கள் ஏனையோருக்கு இருந்திருக்கலாம். ஆனால், இறை இலக்கணத்தை நன்கு அறிந்திருந்த அனுமனுக்கு இந்த ஐயங்கள் எதுவும் எழவில்லை. இறைவனுடைய பல்வேறு குணங்களில். 'சௌலப்பியம்' என்று கூறப்படும் எளிவந்த தன்மையும் ஒன்றாகும். குழந்தை தந்தையை நோக்கி 'இந்தப் புத்தக மூட்டையை உன்னால்தூக்க முடியுமா' என்று கேட்டால், எந்தத் தந்தையும் குழந்தையினிடம்கோபித்துக்கொள்ள மாட்டான். அதேபோல இராமனும் கோபித்துக்கொள்ளமாட்டான் என்ற எண்ணம் உடையவனாதலால், இராமனை ஐயப்படும் சுக்கிரீவனை நோக்கி, பிறிதும், அன்னவன் பெரு வலி ஆற்றலை, பெரியோய்! அறிதிஎன்னின், உண்டு உபாயமும்; அஃது அரு மரங்கள் நெறியில் நின்றன ஏழில், ஒன்று உருவ, இந் நெடியோன் பொறிகொள் வெஞ் சரம் போவது காண்! . . . . (3863) என்று அனுமன் பேசுகிறான். அனுமன் பணிபுரிந்தது சுக்கிரீவனிடமே ஆகும். சுக்கிரீவனிடம் கொண்டஇராச விசுவாசத்தால் வாலியையும் பகைத்துக் |