66

தேவை என்பதைச் சாம்பன் அறிவுறுத்துகிறான். ''நினைவாலும் மாதர்
நலம் பேணாது வளர்ந்தீர்'' என்ற தொடர் இது வரை நாம் கண்டிராத
அனுமனின் பண்பாட்டின் ஒரு பகுதியை, மிக இன்றியமையாத பகுதியை
எடுத்துக்காட்டுகிறது. கிட்கிந்தா காண்டத்தில் இறுதியில் வரும் படலத்தில்
வரும் இப்பாடல் சுந்தர காண்டம் முழுமையும் ஆக்கிரமித்திருக்கும்
அனுமனைப் பற்றிய முன்னுரையாக அமைகிறது.

     இவ்வாறு விலங்கு வடிவங் கொண்ட இரண்டு பாத்திரங்களை ஈடு
இணையற்ற முறையில் படைத்து உலகக் காப்பியங்களுள் வேறு எங்கும்
காணமுடியாத சிறப்பினைத் தனதாக்கிக் கொண்டான் கம்ப நாடன்.