காண்டங்களில் கண்டோம்.சிறையெடுக்கப்பட்டு அசோக வனத்தில் எவ்விதத் துணையுமின்றி அல்லற்பட்ட நிலையில் அவளுடைய சௌந்தரியம் என்ன ஆயிற்று என்று கேட்பவர்க்கு விடை கூறுகிறான், அவளை நேரே கண்ட அனுமன். முழு அலங்காரங்களோடு இருந்த பிராட்டியைத்தான் இராமன் அறிவான். காட்டிடை வாழ்ந்தபோது எவ்வித அணியுமின்றிப் பிராட்டி இருந்தாளேனும் அவள் அழகிற்கு எவ்விதக் குறையும் இல்லை. இவ் அணிகள் பூண்டிருந்த காலத்திலும் அவை பிராட்டிக்கு அழகு சேர்க்காமல் அவள் அழகை மறைக்கவே பயன்பட்டன என்பதையும் கம்பநாடன் 'உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது ஓரார்' (1119) என்ற அடியில் குறிப்பிடுகிறான். இத்துணை அழகையும் இராகவன் கண்டிருப்பினும் பிராட்டியிடம் அவன் கண்டிராத ஓர் அழகைத் தொண்டனாகிய அனுமன் காணுகிறான். 'தவம் செய்த தவமாம் தையலின் அழகை இராகவன் "காண நோற்றிலன் கமலக் கண்களால்" (5141) என்று அனுமனே பேசுகிறான். சீதையினுடைய வடிவழகை ரூப சௌந்தரியம் என்பர் வடமொழியாளர். அசோகவனத்திற்கு வருகின்றவரை அவள் தவத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதே இல்லை. ஆனால், அசோகவனத்தில் இராகவனைப் பிரிந்து பிராட்டியிருக்கும்பொழுது தவம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அதன் விளைவாக அந்த ரூப சௌந்தரியத்தையும் (வடிவழகையும்) மீதூர்ந்து தவ சௌந்தரியம் அவளிடம் தோன்றலாயிற்று. அதனைக் காணும் பேறு பெற்றவன் அனுமன் ஒருவனேயாவான். அந்தத் தவ சௌந்தரியத்தை மனத்தில் கொண்டுதான் அவளைப் பற்றி இராகவனிடம் பேசும்போது 'தவம் செய்த தவமாம் தையல்' என்று பேசுகிறான். பிராட்டியிடம்தவ அழகு மிளிர்ந்தது என்றால் அவளைக் காத்துநின்ற அரக்கியர்களும் தவறான எண்ணத்துடன் அவளிடம் பேசவந்த இராவணனும் ஏன் இதனைக் காணவில்லை என்ற வினாத் தோன்றுவது இயல்பே. இராவணனைப் பொறுத்தமட்டில் வடிவழகைமட்டும் கண்டானே தவிரத் தவ அழகைக் காணவில்லை. காரணமென்ன ? தவம் என்றால் புலனடக்கம் என்று பொருள் கொள்ளலாம். புலனடக்கம் இல்லாதவர்கள் தவம் செய்யவும் முடியாது; தவத்தால் தோன்றும் அழகைக் காணவோ, அறியவோ, தெளியவோ, உணரவோ |