25   யுத்த காண்டம்

மிக    முக்கியமான  ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. பலர்
அக்கூட்டத்தில் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் எனப்
பேசுகின்றனர்.   கும்பகர்ணன் இராவணனை  இடித்துக் கூறும்
அறவுரைகளைத்   தந்ததோடு     விட்டுவிட்டான். இறுதியாக
இராவணன்   கருத்துக்கு    ஓரளவு    இசைந்தும் விட்டான்.
வீடணன், இராவணன்    தவற்றைச்    சுட்டிக்காட்டிப் போர்
செய்தால், வெற்றி கிட்டாது என்பதையும், இராவணன்  அழிவு
உறுதி என்பதையும் எடுத்துக்காட்டினான். இராவணன்  கோபம்
எல்லை கடந்த   நிலையில்    வீடணன்    இரணியன் கதை
சொல்வதாகக் காப்பியம்   அமைந்துள்ளது.   தன்னை மறந்த
கோபத்தில் இருக்கும்  ஒருவனிடம்   176      பாடல்களைக்
கூறுவதாகப்     பாடுவது  முற்றிலும்   பொருத்தமற்ற தாகும்.
அப்படியும்       இரணியன்      கதையை      விரிவாகக்
கூறிவிடுவதால்மட்டும் இராவணன் மனம்    திருந்திவிடுவான்
என்று எதிர்பார்ப்பதும் பொருத்தமற்ற   தாகும்.    வீடணன்
மூன்று சாபங்களை எடுத்துக்காட்டி, இராவணன் அழிவு உறுதி
என்று     நிரூபணம்    செய்தபின்னும்   இராவணன் மனம்
மாறவில்லை     என்றால்,    எங்கோ   வாழ்ந்த இரணியன்
கதைகேட்டு    மனம்    மாறிவிடுவான்  என்று நினைப்பதும்
அறியாமை  யாகும்.   அப்படி   இருந்தும் வீடணன் கூற்றாக
இப்படலத்தைக் கம்பன் அமைப்பதன் காரணமென்ன?
 

நூற்று எழுபத்தாறு பாடல்களைக் கொண்ட இப்படலத்தை
ஒரு   குறுங்காப்பியம் என்றே பல்கலைச் செல்வர் முனைவர்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரும்     திறனாய்வுச்      செல்வர்
வ.வே.சு.ஐயரும் கூறியுள்ளனர். வான்மீகி உள்பட வேறு எந்த
இராமாயணத்திலும் காணப்படாத    இப்பகுதியைக்   கம்பன்
பாடினான் என்றால், வலுவான காரணம் இருத்தல் வேண்டும்.
 

கம்பனுடைய   காலம்  9ம் நூற்றாண்டு என்று முன்னரே
கூறப்பட்டுள்ளது.   தமிழகத்தின் அன்றைய நிலையைச் சற்று
ஆராய்ந்து பார்த்தல் வேண்டும் . 6ம்  நூற்றாண்டின் இறுதிப்
பகுதி தொடங்கி, 8ம் நூற்றாண்டின் கடைப்பகுதி வரை உள்ள
கால    கட்டத்தில்    நான்கு நாயன்மார்களும் பன்னிரண்டு
ஆழ்வார்களும் தோன்றி,   பக்தி  இயக்கம் என்ற ஒன்றைப்
பெரும்       சூறாவளியாக      மாற்றி,       தமிழகத்தில்
உலவவிட்டுவிட்டனர்.     பாகவத   புராணம் கூறுவதுபோல,
பக்தியும், வைராக்கியமும் தமிழகத்தில் தோன்றி, கர்நாடகம்,