27   யுத்த காண்டம்

காணாமல்,     பிரம்மம்  ஒன்றுதவிர ஏனைய அனைத்தும்
மித்தை   என்று   கூறும் அத்வைதம் தமிழர்களை ஓரளவு
கவரலாயிற்று. அந்த   உபநிடதங்களை வைத்துக்கொண்டே,
பக்தி   இயக்கத்திற்கு  வழிகாண முற்பட்டான் கம்பநாடன்.
'இது   சரியா?'   என்ற வினா எழலாம். முக்கியமான பத்து
உபநிடதங்களை   வைத்துக்கொண்டுதான் பிரம்மம் ஒன்றே
உண்மை என்று பேசுகிறார் சங்கரர். அதே உபநிடதங்களை
வைத்துக்கொண்டுதான்     முப்பொருள்பற்றிப்  பேசுகிறார்
இராமானுஜர்.     எனவே,    ஒன்றுக்கொன்று  மாறுபட்ட
கொள்கைகளை   நிறுவ    அதே      உபநிடதங்களைப்
பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
 

இந்த  நுணுக்கத்தைத்தான் கம்பன் பயன்படுத்துகிறான்.
தான்    சொல்லும்      இக்கருத்துக்கள், உபநிடதங்களில்
காணப்படுபவையே என்பதை,
 

"அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப் புறத்து
உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ

(இர.வதை 62)
 

என்ற அடிகள் மூலம் கவிஞனே பேசுகிறான். இரணியன் வதைப்
படலத்தில் உள்ள 74,75,76, ஆம்   பாடல்கள்   சாந்தோக்கியம்,
முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சாரமாக  - ஏறத்தாழ அதே
உவமைகளை  -    எடுத்துப்    பேசுவனவாக அமைந்துள்ளன.
"காலமும் கருவியும்"   என்று   தொடங்கும் பாடல்  "ஆலமும்
வித்தும் ஒத்து அடங்கும்   ஆண்மையான்" என்று    முடிகிறது
 இந்த    அடி     சாந்தோக்கிய    உபநிடதத்தில்  ஆறாவது
அத்தியாயத்தின்     பன்னிரண்டாவது க ண்டத்தில் உள்ள 1,2,3
பாடல்களின் பிழிவாகும்.
  

முண்டக     உபநிடதத்தின்     மூன்றாவது முண்டகத்தின்,
இரண்டாவது     கண்டத்தில் உள்ள எட்டாவது பாடலில் வரும்
கடல், ஆறு நீர்      என்பவற்றை எடுத்துக்கொண்டு ஒரு சிறிது
மாற்றிக் கம்பன், இப்படலத்தின் 77 வது பாடலில்   "வேலையும்
திரையும் போல் வேறுபாடு இலான்" என்று பாடுகிறான்.
 

76வது பாடலில் உள்ள "தூமமும் கனலும் போல் தொடர்ந்த
தோற்றத்தான்"    என்ற     கருத்து  முண்டக உபநிடதத்திலும்,
கீதையிலும் சில மாறுபாடுகளுடன் பேசப்படுகிறது.