29   யுத்த காண்டம்

காரணமாக      இருந்தது    போலும்.   இவ்வாறு கொள்ளாமல்,
தேரழுந்தூரில்     உள்ள    திருமால்  கோவிலில் காணப்பெறும்
நரசிம்மசாமி சிலையே, கம்பன் இதனைப் பாடக்   காரணமாயிற்று
என்று கூறுவோரும் உளர். திவ்வியப்   பிரபந்தத்தில் முக்குளித்த
கம்பனுக்கு, நரசிம்ம அவதாரம்,  பிரகலாதன் கதை என்பவை மிக
நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.    எனவே, சிலையைப் பார்த்துப்
புதிய    எண்ணம்    தோன்றிற்று  என்று கூறுவது அத்துணைப்
பொருத்தமாகப் படவில்லை.
  

39 படலங்களுடன், இராம காதையில் தனிமுடியாய் விளங்கும்
யுத்த       காண்டத்தில்,    ஈடு    இணையற்ற முறையில் பல
பாத்திரங்களைப் படைக்கிறான் கம்பநாடன். காப்பிய நாயகனாகிய
சக்கரவர்த்தித் திருமகன், இராம அனுஜனாகிய இளைய பெருமாள்,
தொண்டின் முழுவடிவாக அமைந்துள்ள அனுமன் ஆகிய மூவரும்
இக்காண்டம்     முழுவதிலும்     வியாபித்துள்ளனர்  என்பதில்
வியப்பொன்று மில்லை. இவர்களை அல்லாமல்  எதிரணியில் ஈடு
இணையற்று விளங்கும் வீடணன், கும்பகர்ணன்,     இந்திரசித்து,
இராவணன்      என்ற     பாத்திரங்கள்      இக்காண்டத்தில்
படைக்கப்பட்டுள்ளன.
  

காண்டத்தின்    முன்னுரையாக அமைந்துள்ள இப்பகுதியில்
இப்பாத்திரங்களின் சிறப்பை முழுவதுமாக  ஆராய்வது இயலாத
காரியம்.    எனவே,    இன்றியமையாத சில பகுதிகளைமட்டும்
தொட்டுக்காட்டுவது பொருத்தமுடையதாக இருக்கும்.
 

வீடணன்: வான்மீகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை
உள்ள பல்வேறு இராமாயணங்களிலும் பல்வேறு பிரச்சினைக்குரிய
பாத்திரமாக     விளங்குவது     வீடணன்    என்ற  பாத்திரம்.
ஒவ்வொருவருடைய    வாழ்விலும்    சிற்சில  சந்தர்ப்பங்களில்
தவிர்க்க    முடியாத இரண்டு கடமைகள் முன்னிற்கக் காணலாம்.
தனித்தனியாக    நோக்கும்போது    இவை ஒவ்வொன்றும் மிகச்
சிறந்தவை      என்பதிலும்      வாழ்க்கையில்      தவறாமல்
கடைப்பிடிக்கப்படவேண்டியது என்பதிலும் ஐயமில்லை. இரண்டும்
ஒன்றுக்கொன்று    துணையாக    நிற்கும்   பொழுது எந்த ஒரு
கடமையை     மேற்கொண்டாலும்,     மற்றொன்று   அதனால்
பாதிக்கப்படுவதில்லை. ஒன்றின் அனுசரணையாகவே மற்றொன்றும்
அமைந்துவிடுகிறது.