ஆனால், கம்பநாடன் ரோமல் தோன்றுவதற்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதனைக் கூறியிருப்பதை மேலே கண்டோம். மேலும் நான்குபுற வாயில்களில் காவல் தலைவர்களைப்பற்றிச் சிந்திக்கும்பொழுது, வடக்கு வாயிலும், மேற்கு வாயிலுமே அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து குரங்குகள் அமைத்த பாலம் இலங்கையின் மேற்குக் கரையைத் தொடுகிறது. அதன் வழியாகச் செல்லும் படைகள் வடக்கு, மேற்கு வாயில்களை விரைவாக அடைய முடியும். எனவே, கவட்டைப் பிரிவின் வழி வரும் படைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் வடக்கு, மேற்கு வாயில்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன, இதனை அறிந்த கம்பநாடன் வடக்கு வாயிலைக் காக்க இராவணனும், மேற்கு வாயிலைக் காக்க இந்திரஜித்தனும் இருந்தனர் என்று கூறுவதுடன், அவ்விருவருக்கும் ஈடு கொடுக்கக் கூடிய வகையில் வடக்கு வாயிலில் இராமனும், மேற்கு வாயிலில் அனுமனும் தலைமை பூண்டனர் என்று கூறுகின்றான். |
பல்லவ சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்து, சோழப் பேரரசு முளைவிடுகின்ற அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்த கம்பநாடன் எந்தப் பெரும் போரையும் நேரே கண்டிருக்க வாய்ப்பில்லை. சடையப்ப வள்ளலின் அன்பில் திளைத்து, குடந்தையை அடுத்த கதிராமங்கலம் என்ற ஊரில் வாழ்ந்த கம்பன் எவ்வாறு இந்த அற்புதமான போர் முறைகளை அறிந்தானோ தெரியவில்லை. ஆனாலும் இன்று ஒரு போர் நடந்தால்கூடப் படைகள் இந்த முறையைத்தான் கையாள வேண்டும். |