வாசுதேவ ஷிண்டி என்னும் ஜைன ராமாயணத்தில் தசரதன் கைகேயிக்குக் கொடுத்த இருவரங்களினால் இராமன் பன்னிரண்டு ஆண்டுகள் காடு செல்லுமாறு பணிக்கப்படுகிறான். தந்தையின்வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இராமன் காடு செல்வதாக இந்நூல் குறிப்பிடுகிறது.38 சங்கஸ்ரீ என்பவரால் இயற்றப்பெற்ற திபெத்திய ராமாயணத்தின்படி தான் கொடுத்த ஒரு வரத்தைவற்புறுத்திய கைகேயியின் விருப்பத்திற்கேற்பத் தசரதன் இராமனை அழைத்து, "நீ மூத்த அரசியின்மகனாகவும், வல்லவனாகவும் இருப்பினும் உன்னை அரசனாக்க இயலவில்லை. பரதனுக்கு அரசைக் கொடுப்பதாகவாக்களித்துவிட்ட காரணத்தால் நீ சீதையுடன் காட்டிற்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுகள்வாழ்வாயாக" என்று ஆணையிடுகிறான். மிக்க பெருந்தன்மையும் பெருள்ளமும் உடைய இராமன் மகிழ்ச்சியுடன்அரசன் ஆணைப்படி சீதையுடன் காடு செல்கிறான். கி.பி. 1586இல் எழுந்த மற்றொரு திபேத்திய இராமகாதையும்கைகேயியினால் இராமன் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்ததை மேற்கண்டவாறே தசரதன்கூற்றாகக் கூறுகிறது.39 பால்யாதரி என்னும் தன் ஆசைநாயகிக்குத் தசரதன் கொடுத்திருந்த இரண்டு வரங்களின்படிஅவளுடைய மகனுக்கு அரசுரிமை தரக் கடமைப் பட்டிருத்தலால் இராமனை அரசுரிமையினின்றும் விலக்கிவிடுவதாக ஹிகாயத் செரீ ராம் என்னும் மலேசிய ராமாயணம் கூறுகிறது.40 ஹொபுட் சுஷூ என்னும் ஜப்பானிய இராமாயணத்தின் கதைத் தலைவனாகிய ததாகத சாக்கியமுனி(இராமன்) தந்தை ஆகிய தசரதனால் காட்டிற்கு அனுப்பப்படவில்லை. பகை அரசனுடன் போரிட்டு நூற்றுக்கணக்கானமக்களின் உயிரை அழிக்க விரும்பாத காரணத்தால் தானே தன் அரசியுடன் நாட்டைக் துறந்து மலைகளடர்ந்த காட்டிற்குச் சென்று விடுகிறான். கொல்லாமை நோன்பைக் காக்கும் பொருட்டுத்தன் நாட்டைத் துறந்து விடுவதாக இந்த இராமாயணம் காட்டுகிறது.41
38. U.P. Shah, p. 64. 39. J.W. De Jong pp. 174 and 178 40. S. Singaravelu, "The literary version of the Rama Story in Malay" Asian Variations In Ramayana, p. 284 41. Minoru Hara, p. 344 |