வரும் அறிந்த ஒன்று. தன்னியல்பான மகிழ்ச்சியினும் மிக்க பேருவகையை இராமன் அடைந்தான் என்று காட்ட விரும்பிய கவிஞன் தாமரை மலரினும் ஒளிமிக்க முகத்தினன் ஆனான் என்று கூறுகிறான். இவ்வாறு இயற்கையான மகிழ்ச்சியினும் மீதூர்ந்த பேரானந்தத்துடன் சீதையைக் காணச் சென்றான் இராமன். அதனால்தான் கம்பன் காட்டும் சீதை வான்மீகியின் சீதையைப் போன்று இராமனின் முகமாற்றத்தைக் கண்டு வருந்தவில்லை. அசோகவனத்தே தனித்திருந்த சீதை இராமன் நினைவாக வருந்தியிருந்த போது, இராமனின் இந்த முகமலர்ச்சியை, ‘தெவ் மடங்கிய சேண் நிலம்’ - கேகயர் - தம் மடந்தை - ‘உன் தம்பியது ஆம்’ என, மும் மடங்கு பொலிந்த முகத்தினன் வெம் மடங்கலை உன்னி, வெதும்புவாள். ‘மெய்த் திருப்பதம் மேவு’ என்ற போதினும் ‘இத் திருத் துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் (v. 3.19.20) என்று நினைவுகூர்வதாகக் கம்பன் காட்டுவதை நோக்க இராமனின் மகிழ்ச்சியும் கம்பனின்குறிப்பும் இனிது வெளிப்படுகின்றன. ‘காடேகு’ என்னும் கைகேயியின் கட்டளையைப் பெற்ற இராமனின் முகம் முன்னையினும் நான்குமடங்கு ஒளிர்ந்து விளங்கியது என்று துளசிதாசர் கூறுவது கம்பன் கருத்தோடு பொருந்தியிருக்கக்காண்கிறோம். மேலும் அரச பாரத்திலிருந்து விடுதலை பெற்றதாக உணர்ந்த இராமனின் மனநிலையை வண்டியில்பூட்டப்பெற்றுப் பின்னர் விடுவிக்கப்பெற்ற நல்லேற்றின் மன மகிழ்ச்சியோடு கம்பன் ஒப்பிட்டுக் காட்டுகிறான். சிறைப்படுத்தப்பெற்ற இளம் யானை ஒன்று விடுவிக்கப் பெற்றதும் அடைந்த மகிழ்ச்சியைப்போன்று அரச பாரத்தினின்று கைகேயியால் விடுவிக்கப்பெற்ற இராமன் பெருமகிழ்ச்சி அடைந்தான் என்னும் துளசிதாசரின் உவமைகம்பன் காட்டும் உவமையோடு ஒப்பிட்டு மகிழத்தக்கதாக அமைகிறது. வான்மீகிக்குப் பிறகு தோன்றிய இந்திய இராமாயணக் கவிஞர்களுள் தலைசிறந்த இவ்விருவரும் ஏறக்குறையஒரே தன்மையில் இராமனின் சமநிலைப் பண்பை வெளிப்பிடுத்தியிருப்பதை நோக்குமிடத்துப் பெருங்கவிஞர்கள்இருவரும் எவ்வளவு தூரம் இராமாம்ருதத்தில் திளைத்திருந்தனர் என அறியமுடிகிறது. |