தான் காரணம் என்று கருதாதே. ஏனெனில் விதியால் உந்தப் பட்ட அவள் தன்னிச்சையின்றித் தனக்கு விருப்பமற்றதைச் செய்துள்ளாள். விதியின் இத்தகைய வலிமையை நீ அறியாயோ? இலக்குவனே, நான் அரசு துறக்க நேர்ந்ததற்கு வருந்தாதே. அரச பாரம் தாங்குதல், கவலையின்றிக்கடமைகளின்றித் தேசங்கள் தோறும் திரிந்து மகிழும் துறவியாகக் காட்டில் வாழ்தல் ஆகிய இவ்விரண்டில் பின்னதே மேலானது. இதுவரை எடுத்துக் கூறிய அறங்களையும், விதியின் வலிமையையும் நன்கு அறிந்துள்ளமையாலும்,இயற்கையான மனோபாவத்தாலும் பக்குவப்பட்டுள்ள எனக்கு அரசுரிமை பெறாமற் போனதால் மனச் சஞ்சலம்என்பதே உண்டாகாமையோடு, அதிக உற்சாகமுடையவனாகவும் நான் இப்போது விளங்குகிறேன். (ii.22. 20-30) ஏறக்குறைய இதே கருத்துடையவனாகக் கம்பராமனும் விளங்குகிறான். ‘அருங்கற்பினோய், மெய்த்திறத்துநம் வேந்தனைப் பொய்த்தினன் ஆக்குதியோ’ என்று கூறிக் கோசலையைத் தேற்றிய இராமன், "நின்னை மௌலி சூட்டத் தடை செய்பவர் தேவரேனும் சுடுவான் துணிந்தேன். உலகு ஏழினோடு ஏழும் உனக்கு யான் தரக்கோடி" என்று உருத்தெழுந்த இலக்குவனை நோக்கி முன்கொற்ற மன்னன் "முடிகொள்க" எனக் கொள்ள மூண்டது என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ? வரம் பெற்றவள்தான் இவ்வையம் சரதம் உடையாள்...........இனி யான் படைக்கின்ற செல்வம் விரதம்; இதின் நல்லது வேறு இனியாவது? என்று தசரதனும் குற்றம் செய்யவில்லை; கைகேயியும் பிழை செய்யவில்லை எனத் தெளிவித்தபின்னர், நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே, பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழையன்று; மகன் பிழை அன்று; மைந்த! விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான் என்று நடந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் விதியே காரணம் என ஒரு சுருக்கம் (ii.22)முழுக்க விளக்கிய வால்மீகியின் கருத்தை இர்த்தினச் சுருக்கமாக ஒரு பாட்டில் கம்பன்விளக்குகிறான். கோசலையையும் இலக்குவனையும் சமாதானப்படுத்துவதுபோல் இப்பகுதி தோற்றமளிப்பினும், கைகேயியின்வரத்தால் இராமனின் சமநிலையாகிய மனநிலை சிறிதும் பாதிக்கப்பட |