121

போன்றதொரு நட்பினைக் குகனிடம் காண இயலவில்லை. தம்பியாக்கிக்
கொள்ளும் தகவுடையவனாகப் பிற இராமாயணங்கள் தம் இராமனைவும்
காட்டவில்லை, இங்கு

ஏழை ஏதலன் கீழ் மகன்என்னாது
     இரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழைமான் மடநோக்கி உன்தோழி
     உம்பி எம்பியென்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீயெனக்கு இங்கொழியென்ற
     சொற்கள் வந்தடியேன் மனத்திருந்திட
ஆழிவண்ண நின் அடியிணை அடைந்தேன்
     அணிபொழில் திருவரங்கத்து அம்மானே.
                             (பெரிய திருமொழி 5.8.1)

எனவரும் திருமங்கை ஆழ்வாரின் திருப்பாசுரம் கம்பனுக்கு வழி காட்டியாய்
இருந்திருக்கக் காண்கிறோம். ஈண்டு ஆழ்வார் கருத்துக்கு எது மூலம் என
அறிய இயலவில்லை.

3. பரதனின் ஏற்புநிலை

     கேகயத்தினின்று வசிட்டனால் வரவழைக்கப்பெற்ற பரதன்
அயோத்தியில் நிகழ்ந்தவற்றைக்கேட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளைப்
பரதன் கைகேயியை நிந்தித்து அரசேற்க மறுத்தல், பரதன் -குகன் சந்திப்பு,
பரதன் - இராமன் சந்திப்பு என்னும் படிநிலைகளில் ஆராயலாம்.

3.1 பரதன் அரசேற்க மறுத்தல்

     கேகயத்தினின்று மீண்ட பரதன் கைகேயியால் விளைந்த
விபரீதங்களைக்கேள்வியுற்று அவளைப் பலவாறு நிந்தித்துக் கோசலையிடம்,
தனக்கேற்பட்ட நிலையைக் கூறிப்புலம்பி நினைவிழந்தான். பின்னர்
வசிட்டனின் ஆறுதலால் ஒருவாறு தெளிந்து தசரதனின் ஈமக்கடன்களைச்
செய்த பின்னர், அரசேற்குமாறு கூறிய வசிட்டன் முதலானோரின்
அறிவுரைகளை ஏற்காமல் இராமனைத்தேடிக் கொணர்ந்து அவனையே
அரசனாக்க எண்ணி அமைச்சர் முதலானோருடன் காடு நோக்கிப்
புறப்பட்டான்.

     இச்செய்தியை எல்லா இராமாயண நூல்களும் ஏறக்குறைய ஒரே
மாதிரியாகக்கூறுகின்றன. பரதன் கோசலையைக் கண்டதும் அவள் கூறிய
சில கடுஞ்சொற்களால் மனம் புண்பட்டபரதன் தன் மீது எந்தத் தவறும்
இல்லை என்று கூறி ஊனுருகப் புலம்பி அழும் காட்சியை வான்மீகம்மிக
விரிவாகப் பேசுகிறது. (சருக்கம் 7 5)