பரதன் சபதமிடுவதாக வரும் இப்பகுதி பிற நூல்களில் இவ்வளவு விரிவாகக் காணப்பெறவில்லை. அரச ஒழுகலாறு, நீதிநூற் கருத்துகள், நம்பிக்கைகள் போன்ற பல்வேறு உடன்காலச்சமுதாயச் செய்திகளை அறிந்துகொள்ள இப்பகுதி மிகவும் பயன்படுகிறது. மண்ணைவிட்டு விலகாத மக்கள்வாசனை இச் சருக்கத்தில் மீதூர்ந்து நிற்கக் காண்கிறோம். பரதன் தசரதனுக்கு ஈமக் கடன்களைச் செய்வதாக வான்மீகம் கூறுகிறது. அதனைஅடியொற்றி எல்லாமொழி இராமாயணங்களும் இச்செய்தியைக் கூறுகின்றன. கம்ப ராமாயணம் மட்டும்தசரதன் ஆணை காரணமாகப் பரதன் ஈமக்கடன்கள் செய்வதிலிருந்து விலக்கப்பட்டுச் சத்துருக்கனன் அவற்றைச் செய்வதாகக் கூறுகிறது. வான்மீக தசரதன், “இராமன் வனம் புகுதல் முறையென்று பரதன் ஏற்றுக்கொண்டால்,அவன் எனக்கு ஈமக்கடன்களைச் செய்தல் ஆகாது (II 12.94)” என்று கூறுகிறான். தசரதன் எதிர்பார்த்தபடியேபரதன் இராமன் காடு சென்றதையோ தனக்கு முடிசூட்டப்படுவதையோ ஏற்காதது மட்டுமல்ல; எதிர்க்கிறான்.எனவே, ஈமக்கடன்கள் செய்வதிலிருந்து அவனை விலக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுணர்ந்த வசிட்டன்அவனையே செய்யுமாறு பணிக்கிறான். பின்னர் வால்மீகியே, “இராமனது பட்டாபிடேகத்தைத் தடுத்தனையாகில், நீயும் பரதனும் எனக்கு ஈமக்கிரியைகள் செய்யவேண்டாம்” (II 14.17) என்றும் கூறுகிறார்.இங்குப் பட்டாபிடேகத்தைத் தடுப்பது கைகேயி, பரதன் அதற்குப் பொறுப்பாகான். எனவே, இராமனுக்குப்பதிலாகப் பரதன் முடிசூட்டிக்கொண்டால் அவன் எனக்கு ஈமக்கடன் செய்யக்கூடாது என்பது தசரதன்கருத்து. அதனாலும் பரதன் விலக்கப்படவில்லை என்பதை வான்மீகம் காட்டுகிறது. கம்ப ராமாயணத்தில் தசரதன் வசிட்டனை நோக்கி இச் செய்தியைக் கூறுமிடத்து, மன்னே ஆவான் அப்பரதன்தனையும் மகன்என்று உன்னேன், முனிவா, அவனும் ஆகான் உரிமைக்கு (II 4.51) |
எனக் கூறுவதால் இங்கும் ‘அரசனாக முடிசூட்டிக் கொள்ளவரும் பரதன்’ தனக்குஉரிமை செய்யலாகாது என்னும் பொருள் தோன்றி நிற்கிறது. வால்மீகியின் தடுமாற்றத்தை உணர்ந்தகம்பன், தானும் குறிப்புப்பொருள் தோன்றக் கூறுகிறான். எனினும், வசிட்டன் பின்னர்ப்பரதனைத் தடுத்து விடுவதாகக் கம்பன் காட்டுகிறான். அத்யாத்மம் முதலான பிற இராமாயணங்கள் எல்லாம் வான்மீகியின் முதல்கூற்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு பரதனே ஈமக்கடன்கள் செய்வதாகக் காட்டுகின்றன. |