அறிவதற்கு ஓரளவு துணை செய்தது; அந்த அளவோடு அது நின்று விட்டது. தசரதனைப் பொறுத்தமட்டில் ஒரு மாபெரும் தவற்றைச் செய்ய முற்பட்டு விட்டான். இராமனுக்குப்பட்டம் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால், அந்தத் தவறான முடிவை அவன் கை விட்டாலொழிய அவனுடைய பெயருக்குப் பெருங்களங்கமும் பாவமும் வந்து சேரும். தான் முன்பு சொல்லிய சொல்லை மறந்து இப்போது புதிய ஒன்றினைத் தொடங்கி விட்டான் தசரதன். ஆகவே, அவனை வழி திருப்பவேண்டும். இதற்கு ஒரே வழி - கன்யா கல்கத்தை அவனுக்கு நினைவூட்டியிருக்கலாம். அவ்வாறு செய்தால்தசரதன் அது வரையில் செய்ததெல்லாம் பெருஞ் சூழ்ச்சிகளாக முடிந்துவிடும். பெரும் பழி தன்பேரில் ஏற்றப்பட்டுவிடும். அப்படியுமில்லாமல், (கன்யா கல்கத்தையே நினைவூட்டாமல்) என்ன காரியத்தைத்தசரதன் செய்ய வேண்டுமோ? அதைத் தான் பெற்ற வரத்தின் மூலமாகச் செய்து கொண்டவளாகக் கைகேயியைக் கம்பன் படைத்துக் காட்டுகிறான். இவ்வாறு செய்ததால் தசரதனுடைய பெயர், குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. அதே நேரத்தில்எவ்விதக் குற்றமும் செய்யாத கைகேயியின் பெயர் மண்ணில் ஆழ்த்தப்படுகிறது. இதனை நன்கு அறிந்திருக்கின்றான்கைகேயி என்பதில் ஐயமே இல்லை. இறதியாகத் தசரதன் ‘நீ உன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லையானால் நான் இறந்துவிடுவேன்’. "உன் கழுத்தின் நாண், உன் மகற்கு காப்பின் நாண் ஆம்" (1653) ‘உன் கழுத்தில் அணிந்திருக்கும் மங்கல நாண், உன் மகன் கைக்குக் காப்பு நாண் ஆகக்கடவது’ என்று தசரதன் கூறிய பொழுதும்கூட, ஒருத்தி பிடிவாதமாகத் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்றாள் என்றால் இது வெறுந் தாய் அன்பினாலோ அல்லது தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென்ற எண்ணத்தினாலோ எடுத்த முடிவாகச் சிந்திப்பதற்கில்லை. ‘பரதனுக்குப் பட்டம்சூட்ட வேண்டுமென்றால் உன் கழுத்திலுள்ள திருமாங்கல்யச் சரடே அவன் கைக்குக் காப்பாகக் கடவது என்று கணவனாகிய தசரதன் சொல்லிவிட்டான் என்றால் இதைவிடப் பெரிய சாபத்தைப் பெற்றுக்கொண்டு, பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென்று கைகேயி நினைத்தாள் என்று நினைப்பது அவளுடைய அறிவுக்கும், பண்புக்கும் பொருத்தமில்லாததாகப்படுகின்றது. |