பரதன் வருகிறான். தாயிடம் பேசுகிறான், ‘தந்தை வானத்தான். அண்ணன் கானத்தான்’ என்று அவள் பேசுகிறாள். அதனைக் கேட்ட பரதன் துணுக்குறுகின்றான். சிறிதும் உணர்ச்சியில்லாமல், ‘ஒருவன் கானத்தான், ஒருவன் வானத்தான்’ என்று சொல்கிறாளே என்று நடுங்குகின்றான் பரதன். உடனே காரணங்கள் கேட்டறிந்தவுடன் "ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ" (2173) ‘தாய் எனும் பெயர் என்னைத் தடுக்கவில்லை. அண்ணன் இராமன் கோபித்துக் கொள்வானேஎன அஞ்சுகிறேன். அதனால் தான் உன்னைக் கொல்லாமல் விட்டு விடுகிறேன்’ என்று பேசுகிறான்பரதன். அந்த நிலையிலும் கைகேயி வாய் திறக்கவே யில்லை. இனி அனைவரும் இராமனை அழைத்து வருவதற்காகச் செல்லும்போது கைகேயியும் செல்கிறாள்.குகனிடம் தன் தாய் மார்களை அறிமுகம் செய்து வைக்கின்ற பரதன், கைகேயியை அறிமுகம் செய்துவைக்கும்பொழுது "படல் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே இடல் இலா முகத்தாளை அறிந்திலையேல் இந் நின்றாள் என்னை ஈன்றாள்" (2371) என்றெல்லாம் பேசுகின்றான். இந்த நிலையிலும் கைகேயி வாயைத் திறக்கவேயில்லை. இறுதியாகஅவள் பேசிய பேச்சு பரதனிடம் ‘வானத்தான், கானத்தான்’ என்று சொன்னாளே அது தான். அதன்பிறகு அவள் வாயே திறக்கவில்லை என்பதை அறியும் போது கொஞ்சம் வியப்புத் தோன்றுகிறது. மிக எளிதான முறையில் தன் கணவன், கொடுத்த வாக்கை மறந்து செய்ய இருந்த தவற்றிலிருந்துஅவனைக் காப்பதற்காகத் தான் அதனைச் செய்தேன் என்று அவள் சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் பரதனோ, கோசலையோ யாருமே அவளைக் குற்றம் சொல்வதற்கில்லை. அந்த நிலையில், ‘அவள் ஏன் அதனைச் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கக்கூடாது’ என்று நினைக்கும் |