"அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது. என்னைக்கொன்று நீங்கலது. இப்பொழுது அகன்றது உன் குலப்பூண் மன்றல் ஆகம் ஆம் காந்தமா மணி இன்று வாங்க" (10068) என்று சொல்லி, ‘நீ வரத்தைக் கேள்’ என்று சொல்லுகின்றான். அப்போது இராமன் கேட்கின்றவரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது. ‘ஐயா, "தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" (10079) என்று கேட்கின்றான். "தீயள் என்று நீ துறந்த என்தெய்வம்" (10079) என்ற வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. தெய்வத்தைப் போல, தன்னுடைய நலத்தைக்கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள் கைகேயி என்பதை இராகவன் உணர்ந்தகாரணத்தால்தான் "என் தெய்வம்" என்று பேசுகின்றான். அந்தத் தெய்வத்தை உள்ளவாறு உணராமல் ஏசி, காழ்ப்புணர்ச்சியோடு இறந்துவிட்ட காரணத்தால், தசரதனைச் சுட்டிக் காட்டுபவன் போல, "தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" (10079) என்று கேட்பதன் மூலம், கைகேயி என்ற பாத்திரத்தைக் கவிச் சக்கரவர்த்தி என்ன அடிப்படையில்படைத்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இராகவனைப் பொறுத்தமட்டில் கைகேயின் தியாகத்தை நன்கு அறிந்திருந்தான் ஆதலால் அவளைத்தெய்வம் என்று கூறுகின்றான். அந்தத் தெய்வம் தன்னுடைய கடமையை நிறைவேற்றுகின்ற முறையில்பேச வேண்டியபொழுது பேசிற்று. கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு இருந்தது. கொள்கையை நிறைவேற்றும்பொழுதுதனக்கு வருகின்றபழி பாவம் முதலிய அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும்வாய் திறந்து பேசி தன்னுடைய பழியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று அந்தப் பாத்திரம்கருதவே இல்லை. அதற்குரிய சந்தர்ப்பங்கள் பலமுறை கிடைத்தும் வாய் திறவாமல் |