50

நாடகப் படுத்தப்பட நேரின்,  நாடக இலக்கண அமைதியின்படியும்
அயோத்தியா காண்டமே தொடக்கமாக அமையும். அவல நாடகம், இன்பியல்
நாடகம் என்னும் இருவகை நாடகப் பாங்கிற்கும் இக்கூற்று பொருந்தும்.
சிக்கலில் தொடங்கி அதன் முறுகலிலோ,  தீர்விலோ நாடகம் முடியுமாதலின்,
இக்காண்டம் காப்பியச் சிக்கலைத் தொடங்கி வைக்கும் தொடக்கமாக
அமையும் தன்மையது.

     இனிக் கதைத் தலைவனின் முழுமை பெற்ற ஆளுமை  (absolute
personality)  எத்தகையதாகஅமையும் என்பதை அறிவிக்கும் ஒரு
முன்னோடியாக இக்காண்ட நிகழ்ச்சிகள் அமைதலின்,  காப்பியமுழுமைக்கும்
உரிய கட்டுக்கோப்பிற்கும் பாவிகத்திற்கும் அயோத்தியா காண்ட நிகழ்ச்சிகள்
பாகம்படும் பாங்கும் இனிது விளங்கும்.

     இவ்வாறு காப்பியப் பாங்கிலும் ,  நாடகப் பாங்கிலும் கதைக்கருவின்
இன்றியமையாத கட்டத்தில்அமைந்திருக்கும் அயோத்தியா காண்ட
நிகழ்ச்சிகளை அவற்றிற்குக் காரணமாகும் பாத்திரங்களின்அடிப்படையில் 
மூன்று பகையாகப் பகுத்து உணரலாம்.  அவையாவன:  தசரதன் விழைவும்
விளைவும்,  இராமனின்ஏற்பு நிலை,  பரதனின் ஏற்பு நிலை என்பன. 
அதாவது,  தசரதன் எடுத்த ஓர் அரசியல் முடிவு அதனால்விளைந்த
சிக்கல்கள், அந்த முடிவினை இராமன் ஏற்றுக்கொண்ட பாங்கும் சிக்கல்களின்
தற்காலிகத்தீர்வும்,  இராமன் முடிவினைப் பரதன் ஏற்றுக்கொண்ட பாங்கும்
அரசியல் சிக்கலின் முற்றியமுடிவும் என்னும் முத்திறப்பாகுபாட்டில்
அயோத்தியா காண்ட நிகழ்ச்சிகள் யாவும் அடங்கும் என்பதுகருத்து.

     இம்மூன்று நிகழ்ச்சி மையங்களில் ஒவ்வொன்றும் சிற்சில காரணக்
கூறுகளையும் காரியவிளைவுகளையும் உடையதாக அமைந்திருக்கும். 
இவற்றையும்  இவற்றுக்குரிய துணைப் பாத்திரங்களின்செயற்பாடுகளையும்
அவ்வந் நிகழ்ச்சி மையங்களின்கீழ் பகுத்து ஆராயலாம். வான்மீகம் முதலான
இராமாயண நூல்கள் இந்நிகழ்ச்சிகளை இலக்கியப்படுத்தியிருக்கும்
தன்மையினைக் கூடுமான வரையில்வரலாற்று நிரலில் இனிக் காணலாம்.

     இராமகாதை நிகழ்ச்சிகளை வான்மீகம் முதலான இராமாயண நூல்களிற்
சில மானுட நிலையிலும்,சில மீமானுட நிலையிலும்,  சில இருநிலைகளிலும்
விவரிக்கின்றன. சிக்கல்களின் தோற்றத்திற்கும்அவற்றின் தீர்வுக்கும் மானுடப்
பாத்திரங்களும் காரணமாய் இருப்பதை இந்நூல்கள் பல்வேறு உத்திகளின்
மூலம் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆய்வில் இவை ஆங்காங்கே
நிகழ்ச்சிகளுக்கேற்ப விதந்துபிளக்கப்படுகின்றன.