1. தசரதன் விழைவும் விளைவும் இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் எனத் தசரதன் விரும்பி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தலும், கைகேயி தான் முன்னரே பெற்றிருந்த வரங்களைப் பயன்படுத்தித் தசரதன் விழைவைச் செயற்படாமல்தடுத்தலும் ஆகிய இருதிற நிகழ்ச்சிகள் இப்பெருந்தலைப்பின்கீழ் அடங்கும். இவற்றைத் தசரதன் முடிதுறக்கக் கருதுதல், அரசவை அம்முடிபை வரவேற்றல், இராமனுக்குத் தக்க அறிவுரை வழங்கல், மந்தரைதசரதன் விழைவை அறிந்து கைகேயியின் மனத்தைத் திரித்தல், வாய்மையிற் கட்டுண்ட தசரதன் கையற்றுஉயிர்நீத்தல், தசரதன் சாபம் பெற்ற வரலாறு என்னும் சிறு தலைப்புகளின்கீழ் ஆராயலாம். 2. இராமனின் ஏற்புநிலை கைகேயியின் ஆணையைக் கேட்ட இராமனின் மனநிலை, இலக்குவனுக்கும் கோசலைக்கும் ஆறுதல்கூறல், இலக்குவனோடும் சீதையோடும் வனம் புகல், இராமன் - குகன் சந்திப்பு என்னும் உள்தலைப்புகளில்இராமனின் ஏற்புநிலை பற்றிய நிகழ்ச்சிகளை ஆராயலாம். 3. பரதனின் ஏற்புநிலை கேகய நாட்டினின்றும் வந்த பரதன் கைகேயியின் வரம்பற்றிக் கேள்வியுற்றதும் மேற்கொண்டசெயல்களும், இராமனை அயோத்திக்கு அழைத்து வருவதற்காக அவன் மேற்கொண்ட முயற்சிகளும் இத்தலைப்பின்கீழ்அடங்கும். இவற்றைக் கைகேயியின் வரத்தை அறிந்த பரதனின் உணர்ச்சியும் செயலும், பரதன் -குகன் சந்திப்பு, பரதன் - இராமன் என்னும் உள்தலைப்புகளில் ஆராயலாம். 1. தசரதன் விழைவும் விளைவும் 1.1. தசரதன் இராமனுக்கு முடிசூட்ட எண்ணுதல் 1.1.1. மூப்புணர்தல் வான்மீகம் மிக்க நுண்ணறிவுடைய தசரதமன்னன் தன் உடல் மூப்பு மேலிட்டு உரங்குன்றி வருவதை உணர்ந்துசிந்தனை வயப்பட்டவனானான். (II. 1. 43) |