64

திற்கு அவர்கள் யாரும் வந்ததாகக் காப்பியம்  கூறவில்லை.  மூலநூற்
சிக்கலை வழி நூல்களே தீர்க்க இயலாதபோது சார்பு நூல் என்ன செய்ய
இயலும்?

1.2.2. அரசியர்க்கு அறிவிப்பு

     இராமனுக்கு நாளை முடிசூட்டுவிழா  நடத்தப்படும்  என்ற தசரதன்
முடிவை இராமனின் நண்பர்கள்கோசலைக்கு அறிவிக்கின்றனர்.  கோசலை
பெருமகிழ்ச்சியுற்றவளாய்ச் சுமித்திரை,  சீதை, இலக்குவன் ஆகியோர் வந்து
சூழ ஐனார்த்தனனை வணங்கினாள் என்றும்,  பின்னர் இராமனே நேரில்
வந்து  இந்தச் செய்தியைத் தன் தாய்க்குக் கூறினான் என்றும் வான்மீகம்
கூறுகிறது.  (II.3.47; 31, 33, 35) அரசவையில் செய்யப் பெற்ற முடிவைக்
கேட்டதும் மங்கையர் நால்வர் ஓடிச்சென்று கோசலைக்கு இச்செய்தியைக்
கூறினர் என்றும்,  பேரானந்தம் அடைந்த கோசலை சுமித்திரையுடன்
நாரணன் கோயிலுக்குச் சென்று வழிபட்டாள் என்றும் கம்ப ராமாயணம்
கூறுகிறது. (ii. 2. 2-7) இராமன் முடி சூடும் செய்தியை அறிந்த சுமித்திரையும்
கோசலையும் பேரானந்த முற்றனர் என்று துளசி ராமாயணம்கூறுகிறது.(II. 8.2)

     வான்மீகம் இராமனின் நண்பர்கள் கோசலைக்குச் செய்தி கூறுவதாகக்
கூறுகிறது.  இராம சரிதமானசம் கோசலைக்குச் செய்தி அறிவித்தவர் யார்
என விதந்து கூறவில்லை.  கம்பன் மட்டும் மங்கையர்நால்வர் உவகை
மீதூரலால் ஓடிவந்து கோசலைக்குக் கூறினர் என்று கூறுகிறான்.  இவற்றுள்
எந்த இராமாயணமும்கைகேயிக்கு இச்செய்தி கூறப்பட்டதாகத்
தெரிவிக்கவில்லை.  எல்லா நூல்களிலும் கைகேயி முதன்முதலாக மந்தரை
மூலமாகத்தான் செய்தி அறிகிறாள்.

     தசரதனோ,  அரச அலுவலர்களோ இச்செய்தியை அரசியர்க்குத் தனித்
தனியே அறிவிக்கவில்லை.நகர் முழுவதும் முரசறைந்து செய்தி
அறிவிக்கப்பட்டதாகக் கம்ப ராமாயணம் கூறுகிறது.  வசிட்டன்மூலமாக இவ்
ஆணை பிறப்பிக்கப்பட்டதாக வான்மீகம் கூறுகிறது.  துளசி ராமாயணம்
இந்தச் செய்தியைவிதந்து கூறவில்லை.

     இனி,  கோசலைக்கும்  சுமித்திரைக்கும் முதன்முதலில் செய்தி
அறிவித்தது  பொதுமக்களேஎன்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் ஏன்
கைகேயிக்கு இதை அறிவிக்கவில்லை என்னும் வினா எழுகிறது. வான்மீகம்
முதலான எல்லா இராமாயணங்களும் இது பற்றி மௌனம் சாதிக்கின்றன.