1. காடுகாண் காதை




20
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி


17
உரை
22

       அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி - தன் பெருமையின் அளவினை உலகத்து மன்னர்களுக்குக் காலான் மிதித்து உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது - வடித்த வேலானும் எறிந்த அப் பெரிய பகையினைப் பொறுக்காது, பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள - பஃறுளியாற்றுடனே பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் வளைந்த கடல் கொண்டவதனால், வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு - வடக்கண் கங்கையாற்றினையும் இமயமலையையும் கைக்கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன் வாழி - தென்றிசையை ஆண்ட பாண்டியன் வாழ்வானாக ;

       
தன்னளவு என்பதற்குக் கடலினதளவு எனலுமாம். அடியால் உணர்த்தலாவது கடல் தன் அடியைக் கழுவுமாறு நின்றமை. இது செய்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்படுவன். அடி
யின் உணர்த்தி வேலால் எறிந்த பழம்பகை யென்க. குலத்து முன்னோன் செய்தியைப் பின்னோனுக்கு ஏற்றியுரைத்தபடி. பின்வருவனவும் இன்ன. "தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" என்பதற்கு,
அடியார்க்கு நல்லார் 'அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன்
வாழ்வானாக'. என உரைப்பர்' 1"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப், புலி யொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை, வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" என்பது கொண்டு அவர் அங்ஙனங் கூறினார் போலும்! கோடு என்பதற்குக் கரையெனப் பொருள் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். அடியார்க்கு நல்லாரும் வேனிற் காதை முதற்கண் 'தொடியோள் பௌவம்' என்பதற் குரை விரித்தவிடத்துத் 'தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும்' கடல் கொண்ட தென்றே கூறினார். பஃறுளியாறு 2"முந்நீர் விழவி னெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" எனப் புறநானூற்றிற் சிறப்பிக்கப்பெற்றமை அறியற்பாலது.


1. கலி. 10-4' 2. புறநானூறு.