2. காட்சிக் காதை

165





170
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்

தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென


165
உரை
172

       இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் - முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ் நாடாக்க விரும்பி இமயத்தே கற் கால் கொள்ளுதலாகிய இதனை நீ எண்ணின், ஏற்பவர் முது நீர் உலகின் முழுவதும் இல்லை - நின்னுடன் எதிர்ப்போர் கடல் சூழ்ந்த உலகத்து ஒருவரும் இல்லை என்று கூறி, இமய மால் வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் - எமது மன்னன் பெரிய இமயமலையிடத்துச் சேறல் கற் புடைத் தெய்வம் செய்ய ஓர் கல் பெறுதல் வேண்டியே யாக லான், வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் - அது குறித்து வடநாட்டு அரசர் யாவர்க்கும், தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில் கயல் புலி மண்தலை ஏற்ற வரைக ஈங்கு என - தென்றிசைக் கண்ணதாகிய வளமிக்க தமிழ் நாட்டு வில்லுங் கெண்டையும் புலியுமென்னும் இவற்றின் இலச்சினையைத் தம்மிடத்துக் கொண்ட ஓலைகளை வரைந்தனுப்புக இப்பொழுதே எனக் கூற;


       
ஆக்கிய, செய்யியவென்னும் எச்சம். உலகின் முழுவதும் - உலகு முழுவதிலும், நும்போல் வேந்தர் என்றது தொடங்கிக் கண் விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் என்பதன்காறுங் அவன் வென்றி வீரங் கூறி, இத்தகைய நின்னை எதிர்ப்பார் ஒருவருமிலராக லான் நீ எண்ணியாங்கே முடித்தல் தகும் என்று கூறி, ஓலை யெழுதுக என்றான் வில்லவன் கோதை. செல்வது, தொழிற் பெயர். எழுத - பண்ண; 1"கடவு ளெழுதவோர் கற்றாரான் எனின்" என்றார் முன்னும். மூவேந்தருள் வென்றி மிக்காற்கு அவனுடைய கொடியும் இலச்சினையுமன்றி, ஏனை இருவருடையவும் உரியவாகக் கூறுதல் மரபு; "தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான், மன்பதை காக்குங் கோமான்" எனப் பின் வருவதுங் காண்க. மண் - இலச் சினை. ஏற்ற - பன்மைவினைப் பெயர்.

 


1 சிலப், 25; 130.