மதங்க முனிவரின் தவச் சாலை அறுசீர் ஆசிரிய விருத்தம் | 3699. | கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவும் என்ன, உண்ணிய நல்கும் செல்வம் உறு நறுஞ் சோலை - ஞாலம் எண்ணிய இன்பம் அன்றி, துன்பங்கள் இல்லை ஆன, புண்ணியம் புரிந்தோர் வைகும் - துறக்கமே போன்றது அன்றே! |
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவும் என்ன - (இவை வேண்டும் என) நினைக்கப்பட்டவற்றையெல்லாம் தரவல்ல கற்பக மரத்தைப் போல; உண்ணிய நல்கும் - உண்பதற்கு (ஏற்ற காய் கனி கிழங்கு தேன் போன்றவற்றை) வழங்குகின்ற; செல்வம் உறு நறுஞ் சோலை - வளம் மிக்கதும் நறுமணம் உள்ளதுமான (மதங்காசிரமம் அமைந்த) சோலையானது; ஞாலம் எண்ணிய - உலகத்தார் அடைய எண்ணிய; இன்பம் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன - இன்பத்தைத் தவிரத் துன்பமே இல்லாத; புண்ணியம் புரிந்தோர் வைகும் - நல்வினை செய்தோர் மட்டுமே வாழ்வதுமான; துறக்கமே போன்றது - சுவர்க்க உலகத்தையே நிகர்த்தது. சோலை துறக்கமே போன்றது எனக் கூட்டுக. விண்ணுலகத்துக் கற்பக மரம் தன் கீழிருப்போர் கேட்பனவற்றையெல்லாம் தரவல்லது என்பர். கற்பகம் போன்ற மரங்கள் செறிந்து இன்பம் அளிக்கவல்லதாய் இருப்பதால் மதங்கா சிரமச் சோலைக்குச் சுவர்க்கம் உவமையாயிற்று. விண்ணுலகில் கற்பக மரங்கள் ஐந்தே உண்டென்பர்; அவ்வாறு எண்ணுமிடத்து மரங்கள் எண்ணிலவாய்ச் செறிந்த மதங்கச் சோலை சுவர்க்கத்தினும் இனிது என்று கருதிப் போற்ற இடம் உண்டு. சுவர்க்கத்தில் உள்ள தேவர் துன்பம் உறுதலும் உண்டு; ஆயின், மதங்கச் சோலையில் உள்ளார் தவ மேம்பாட்டாலும் மீளா ஆளாய் இறைவனுக்கு ஆட்பட்ட சிறப்பாலும் இன்பமே தவிரத் துன்பம் அறியார். 'நாமார்க்கும் குடியல்லோம்' என்றெடுத்த திருவாக்கில் 'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்று ஓதிய அப்பர் பெருமான் பாங்கினை எண்ணுக. 'வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்' (265) என்ற திருக்குறளின் பொருள் இப்பாடலில் கம்பரால் போற்றப்பட்ட பாங்கினை எண்ணி உணர்க. கண்ணிய : பெயர்ச்சொல் (கண்ணுதல் : நினைத்தல்; இங்கே நினைக்கப்பட்ட பொருள்களைக் குறித்தது). தருவே என்ற சொல்லில் ஏகாரம் கற்பக மரத்தின் சிறப்பைப் புலப்படுத்திற்று உண்ணிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமாய் 'உண்ணுதற்கு' என்று பொருள் கொண்டது. ஞாலம் : ஆகுபெயராய் உலக மக்களைக்குறித்தது. 1 |