3710. | ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனர் பேர்ந்து, ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால், ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது; |
ஈர்ந்த நுண்பளிங்கென - அறுத்துச் செம்மை செய்யப் பெற்ற நுண்ணிய பளிங்கு போல; தெளிந்த ஈர்ம்புனல் - தெளிவாக உள்ள (அப்பொய்கையில்) குளிர்ந்த நீர்; பேர்ந்து, ஒளிர் - இடை விட்டு ஒளி வீசுகின்ற; நவமணி படர்ந்த - நவமணிகளும் வைத்து இழைக்கப் பட்டுள்ள; பித்திகை - படித்துறைச் சுவர்களில்; சேர்ந்துழிச் சேர்ந்துழி - படியுந்தொறும் படியுந்தொறும்; நிறத்தைச் சேர்தலால்- அந்தந்த மணிகளின் நிறத்தைப் பெறுவதால்; ஓர்ந்து உணர்வு இல்லவர் - (அப்பொய்கை) பல நூல்களை ஆராய்ந்தும் உண்மைப் பொருளை உணரும் அறிவில்லாதவரின்; உள்ளம் ஒப்பது - மனம் ஒத்து விளங்கியது. பொய்கையின் நீர் தெளிவுமிக்கது என்பதைக் கூற ஈர்ந்த நுண்பளிங்கை உவமையாகக் கூறினார். பளிங்குபோலத் தனக்கென ஒரு நிறமில்லாமல் தெளிந்த பொய்கையின்நீர், தான் சார்ந்த மணிகளின் நிறம் பெற்றமைக்கு, எவர் கூறும் பொருளையும் உண்மைப் பொருளென ஏற்கும் மெய்யறிவில்லார் உள்ளம் உவமை. தெளிந்த புனல் சார்ந்த மணிகளின் நிறத்தைப் பெறுவதாகக் கூறுவதால் 'பிறிதின் குணம் பெறலணி'யுமாம். பளிங்கு, தன்னை அடுத்த பொருளின் நிறம்பெறும் என்பதை 'அடுத்தது காட்டும் பளிங்கு' என்னும் திருக்குறளாலும் (706) அறியலாம். ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.'' என்னும் குறள் (423) உண்மை அறிவின் இலக்கணம் கூறுவதைக் காண்க. ஓர்ந்தும் - உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. இப்பாடல் ஆய்ந்து அறியும் அறிவில்லார் இயல்பைப் பொய்கையுடன் இயைத்துக்கூறுவது. 2 |