3711. | குவால் மணித் தடம்தொறும் பவளக் கோல் இவர் கவான் அரசுஅன்னமும், பெடையும் காண்டலின், தவா நெடு வானகம் தயங்கு மீனொடும், உவா மதி, உலப்பு இல உதித்தது ஒப்பது; |
குவால் மணித் தடம்தொறும்- குவியலாக மணிகளைப் பெற்றிருக்கும் பொய்கையின் இடமெல்லாம்; பவளக்கோல் இவர் கவான் - பவளத்தாலான கோல் போன்ற சிவந்து நீண்ட கால்களையுடைய; அரசு அன்னமும் - அரச அன்னங்களும்; பெடை அன்னமும்- பெண் அன்னங்களும்; காண்டலின் - (சேர்ந்து) காணப்படுவதால்; தவா நெடு வானகம் - அழியாத பெரிய ஆகாயத்திடை; தயங்கு மீனொடு - விளங்குகின்ற விண்மீன்களோடு; உவாமதி உலப்பு இல - அளவற்ற நிறைமதிகள்; உதித்தது ஒப்பது - தோன்றியதைப் போல (அப்பொய்கை) விளங்கியது. அன்னப்பறவைகளில் சிறந்தது அரச அன்னம். காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும் நான்கு பூதங்களுக்கு முன்னர்த் தோன்றி. அவை அழியுமளவும் தான் அழியாமல் இருத்தலால் வானிற்குத் 'தவா' என்னும் அடைமொழி தரப்பட்டது. 'உவாமதி உலப்புஇல' என்பதால் இல்பொருள் உவமை அணி. பெடைகளால் சூழப்பட்டு விளங்கும் அரச அன்னம்; அசுவனி முதலிய விண்மீன்கள் சூழத்தோன்றும் முழுநிலவை ஒத்து விளங்கிற்று. அன்னத்திற்கு வெண்மதியும், பெடை அன்னங்களுக்கு அசுவனி முதலிய விண்மீன்களும் பொய்கைக்கு வானமும் உவமை. அசுவனி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களும் சந்திரனுக்கு மனைவியர் என்பது புராணக் கொள்கை. 3 |