3712.ஓத நீர் உலகமும்,
     உயிர்கள் யாவையும்,
வேதபாரகரையும், விதிக்க
    வேட்ட நாள்,
சீதம் வீங்கு உவரியைச்
    செகுக்குமாறு ஒரு
காதி காதலன் தரு
    கடலின் அன்னது;

     ஒரு- ஒப்பற்ற; காதி காதலன்- காதி என்னும் அரசனின் மகனாகிய
விசுவாமித்திரர்; ஓதநீர் உலகமும் - குளிர்ந்த கடலால் சூழப் பட்ட
உலகத்தையும்; உயிர்கள் யாவையும் - அவ்வுலகில் வாழும் உயிர்களையும்;
வேத பாரகரையும் -
வேதங்களைக் கரைகண்டவர்களான முனிவர்களையும்;
விதிக்க வேட்ட நாள் -
(திரிசங்கு அரசனுக்காக) படைக்க விரும்பிய
காலத்தில்; சீதம் வீங்கு உவரியை - (நான்முகன் படைத்த) குளிர்ச்சி மிக்க
உப்புக்கடலை; செருக்குமாறு - வெல்லுமாறு; தரு கடலின் அன்னது -
படைத்த நன்னீர்க்கடலை ஒத்திருக்கும்.

     பொய்கை இனிய நீரைப் பெற்றிருத்தலால் உப்புக்கடலுக்கு மாறாகப்
பூமியினிடைப் படைத்த நன்னீர்க்கடலை ஒத்தது எனப்பட்டது.

     காதி காதலன் - காதியின் அன்பிற்கு உரியவன்; விசுவாமித்திரர்.
வேதபாரகர் - வேதங்களை ஐயந்திரிபறக் கற்றுப் பிறர்க்கு ஓதுவிக்கவும்
வல்லவர். முன்னர் 'உவரி' என்றமையால் பின்னர் வரும் கடல் 'நன்னீர்க்
கடல்' என்னும் பொருளில்வந்தது.                               4