3713. | 'எல் படர் நாகர்தம் இருக்கை ஈது' எனக் - கிற்பது ஓர் காட்சியது எனினும், கீழ் உற, கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய சொற் பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது; |
எல்படர் நாகர்தம் இருக்கை - (அப்பொய்கை) ஒளி படர்ந்த நாகர்களின் இருப்பிடம்; ஈது என - இதுதான் என்று; கிற்பது - சுட்டிக்காட்டும்; ஓர் காட்சியது எனினும் - ஒரு தோற்றத்தை உடையதாயினும் (ஆழமுடையதாயினும்); கற்பகம் அனைய - கற்பகத்தரு போன்ற; அக் கவிஞர் - அந்தச் சிறந்த கவிஞர்கள்; நாட்டிய சொற் பொருளாம் என - நிலை நிறுத்திய சொற்களின் பொருள் போல; கீழ்உற- கீழ்உலகம் வரையிலும்; தோன்றல் சான்றது - காணும் தெளிவுடையது; பொய்கை நாகர் உலகம் தெரிகின்ற அளவு ஆழம் உடையதென்றார். கவிஞர்கள் கூறும் சொற்பொருள்போலத் தெளிவும் ஆழமும் பெற்றிருந்தது. (வடிவிலே தெளிவு; கருத்திலே ஆழம்). கற்பகத்தரு வேண்டுவார்க்கு வேண்டியன அளித்தல் போல உயர்ந்த கவிஞர்களும் பயில்வார் விரும்பத்தகு நலமிகு கருத்துக்களைக் கொடுக்க வல்லவர்களாதலின் 'கற்பகம் அனையர்' எனப்பட்டனர். 'அக்கவிஞர்' என்பதில் அகரச் சுட்டு, புலவர்களின் புகழை உணர்த்தும். கவிஞர்கள் இயற்றிய நூல்கள் ஆழ்ந்த பொருள் கொண்டதாயினும் பயில்வார்க்குத் தெளிவாக விளங்கவைத்தல் போலப் பொய்கை ஆழமுடையதாயினும் தெளிந்தஇயல்புடையதாயும் விளங்குகிறது; உவமை அணி. 'சான்றோர் கவியெனக்கிடந்த கோதாவரி' என்று நதிக்குச் சான்றோர் கவிதையை உவமைகூறியிருத்தலை ஆரணிய காண்டத்தும் காணலாம். (2732) 5 |