3714. | களம் நவில் அன்னமே முதல, கண் அகன் தள மலர்ப் புள் ஒலி தழங்க, இன்னது ஓர் கிளவி என்று அறிவு அருங் கிளர்ச்சித்து; ஆதலின், வள நகர்க் கூலமே போலும் மாண்பது. |
கண் அகன் - இடமகன்ற; தளமலர் - இதழ்களையுடைய தாமரை மலர்களில் இருக்கின்ற; களம் நவில் - இனிதாகக் கூவுகின்ற; அன்னமே முதல - அன்னங்கள் முதலான; புள்ளொலி - பறவைகளின் ஒலி; தழங்க- மிகுதியாக ஒலிக்க; இன்னது ஓர் கிளவி என்று - இன்ன பறவையின் ஒலி இஃது என்று; அறிவு அரும் கிளர்ச்சித்து - அறிய முடியாத எழுச்சியினை உடையது; ஆதலின் - அதனால்; வளநகர்க் கூலமே போலும்- (அப்பொய்கை) செல்வம் மிக்க பெரிய நகரங்களில் காணப்படும் கடைவீதியை ஒத்திருக்கும்; மாண்பது - சிறப்பினை உடையது. பொய்கைக்கு வளநகர்க்கூலமும், பொய்கையில் எழுந்த பறவைகளின் ஒலிக்கு நகரக்கடைத்தெருக்களில் கொள்வாரும் கொடுப்பாருமாய் எழுப்பும் ஒருங்கெழுந்த பேச்சொலியும் உவமைகளாம்; உவமை அணி. களம்; இன்னோசை. 'களங்கொள் திருநேரிசை' (திருநாவுக்கரசர் 337) என்பது பெரியபுராணம். சிறப்புக்கருதி 'மலர்' என்பது தாமரையைக் குறித்தது. ஏகாரம் இரண்டும் இசைநிறை. ''பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே, அல்லங்காடி அழிதரு கம்பலை'' (மதுரைக்காஞ்சி. 543 - 544), 'பலவும் எண்ணில குழீ இச், சிரம் சிறிதசைத்தும், சிறகையடித்தும் அந்தியங்காடியின் சந்தம் காட்டி' (மனோன்-2-1-122-124) என்ற அடிகள் ஒப்புநோக்கத்தக்கன. 6 |