3715.அரி மலர்ப் பங்கயத்து
     அன்னம், எங்கணும்,
'புரிகுழல் புக்க இடம்
     புகல்கிலாத யாம்,
திருமுகம் நோக்கலாம்; இறந்து
     தீர்தும்' என்று,
எரியினில் புகுவன எனத்
     தோன்றும் ஈட்டது;

     எங்கணும் - (அப்பொய்கை) எல்லாப் பக்கத்திலும்; அரிமலர்ப்
பங்கயத்து அன்னம் -
செந்தாமரை மலர்களில் உள்ள அன்னங்கள்;
புரிகுழல் புக்க இடம் -
'சுருண்ட கூந்தலையுடைய சீதை சென்ற இடத்தை;
புகல்கிலாத யாம் -
(அறிந்து) கூற இயலாத நாங்கள்; திரு முகம்
நோக்கலம்-
இராமபிரானின் அழகிய திருமுகத்தைப் பாரோம்; இறந்து
தீர்தும் என்று -
இறந்து ஒழிவோம்' என்று; எரியினில் புகுவன என -
நெருப்பில் புகுவனபோல; தோன்றும் ஈட்டது - காணப்படும் தன்மை
உடையது;

     தமக்கும் சீதைக்கும் தங்குமிடம் தாமரைமலராக விளங்கவும் தம்மால்
சீதையிருக்குமிடத்தைக் கண்டறிந்து உரையாமையாகிய குற்றம் தம்மீது
இருப்பதாகக் கருதி அன்னங்கள் நெருப்பில் புகுவன போலக் காணப்பட்டன.
அன்னங்கள் மீது கவிஞர்தம் கருத்தையேற்றிக் கூறுதலின் இது தற்குறிப்பேற்ற
அணியாம். நெருப்பை உவமை கூறியதனால் அரிமலர் எனப்பட்டது. அரி -
செம்மை. அலர்ந்த தாமரைக்கு எரியும் நெருப்பு உவமை. ''சேறார்
சுனைத்தாமரை செந்நீ மலரும்'' (திருவாய்மொழி-6-10.2), 'புண்டரிகம் தீ
எரிவது போல விரிய' (நளவெண்பா-1-126) என்னும் அடிகள் ஒப்பு
நோக்கத்தக்கன. பங்கயம் - பங்கஜம்; சேற்றில் முளைப்பது; புரிகுழல் -
அன்மொழித்தொகை                                            7