3716. | காசு அடை விளங்கிய காட்சித்து ஆயினும், மாசு அடை பேதைமை இடை மயக்கலால், 'ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம்' என, பாசடை வயின்தொறும் பரந்த பண்பது; |
காசு அடை விளங்கிய -(அப்பொய்கை) அடியில் கிடக்கும் மணிகளைக் காட்டவல்ல; காட்சித்து ஆயினும் - தெளிந்த தோற்றத்தை உடையதாயினும்; மாசு அடை பேதைமை- குற்றம் பொருந்திய அஞ்ஞானம்; இடை மயக்கலால் - இடையே தோன்றி மயக்குவதால்; ஆசு அடை நல் உணர்வு - குற்றத்தின் வயப்பட்டு மயங்கும் மெய்யறிவு; அனையது ஆம் என-போல்வது என்று சொல்லும்படி; பாசடை - பசுமையான இலைகள்; வயின்தொறும் - இடந்தொறும்; பரந்த பண்பது - பரவி விளங்கும் தன்மையை உடையது. மெய்யறிவு தான் மாசற்றதாக இருந்தாலும், முக்குண வயப்பட்டுச் சில போது மாசடைந்து மயக்கமுறுகின்றது. அஞ்ஞானம் இடைஇடையே தோன்றி மெய்யறிவை மயக்குதல்போலத் தெளிவுமிக்க நீரில் தாமரை முதலியவற்றின் பசிய இலைகள் இடை இடையே பரவிப் பொய்கையிலுள்ள பொருள்களை மறைக்கின்றன என்பதாம். உவமை அணி. பொய்கை நீர் தெளிந்த நிலைக்கு நல்லுணர்வும், அந்நீர் தாமரை இலை முதலியவற்றால் மறைப்புண்ட நிலைக்குப்பேதைமையால் மயங்கிய நல் உணர்வும் உவமை. நல்உணர்வு - மெய்யறிவு.பிறப்பு, வீடு பற்றி ஐயம் திரிபின்றித் தெளியும் அறிவு நல் உணர்வாகும்.உண்மையல்லதை உண்மை என மயங்கும் நிலையே பேதைமையாகும்.ஆசடைதல் - பழைய பயிற்சி வயத்தால் புலன்களின் மேல் ஒரோவழி நினைவுசென்று கெடுதல். பாசடை - பண்புத்தொகை. ''பாசிபடு குட்டத்தின். . . . அகலும் பின் அணுகும்'' (சித்தியார் - 8. 39); 'பாசி களைந்து நன்னீர் காணும் நல்லோர், சொல்லுணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே'' (தாயுமானவர்- பராபரக் கண்ணி) என்னும் அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன. 8 |