3717. | 'களிப் படா மனத்தவன் காணின், ''கற்பு எனும் கிளிப் படா மொழியவள் விழியின் கேள்'' என, துளிப் படா நயனங்கள் துளிப்பச் சோரும்' என்று, ஒளிப் படாது, ஆயிடை ஒளிக்கும் மீனது; |
களிப்படா மனத்தவன் - (சீதையைப் பிரிந்ததால்) மகிழ்ச்சி இல்லாத மனத்தையுடைய இராமன்; காணின் - தம்மைக் கண்டால்; கற்பு எனும் கிளிப்படா மொழியவள் - கற்பின் வடிவமாகத் திகழும் கிளியினிடமும் அமையாத இனிய மொழிகளை உடைய சீதையின்; விழியின் கேள் என - கண்களுக்கு உறவானவை (ஒப்பாவன) என எண்ணி; துளிப்படா நயனங்கள்- முன்னர் ஒருபோதும் நீர் துளிக்காத கண்களில்; துளிப்ப - நீர் துளிக்க; சோரும் என்று - கலங்குவான் என்று; ஒளிப்படாது - வெளிப்படாது; ஆயிடை - அவ்விடத்தில்; ஒளிக்கும் மீனது- மறைந்துகொள்ளும் மீன்களை உடையது. கிளியின்மொழி மகளிர் மொழிக்கு இனிமையால் ஒப்புமை ஆயினும், சீதையின் மொழி கிளிமொழியினும் இனிமை பொருந்தியது என்பதால் 'கிளிப்படா மொழியவள்' என்றார். நீரிடை மீன்கள் மறைதல் இயல்பு எனினும், தம்மைக் காணநேரின் இராமபிரானுக்குச் சீதையின் கண்கள் நினைவிற்குவர வருந்துவானாதலின், அதைத்தவிர்க்க மீன்கள் மறைந்து ஒளிவதாகக் கற்பித்துக் கூறியதால் இஃது ஏதுத்தற்குறிப்பேற்ற அணியாம். கற்பின் வடிவமாகச் சீதை திகழும் நிலையைச் சுந்தரகாண்டத்தும் கம்பர் 'கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்' (6035) என்பர். 'துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்' என்றது இராமன் உலகியல் மனிதனாகத் துன்பங்களை அனுபவிப்பான் என்பதைஉணர்த்துகிறது. 9 |