3718.கழை படு முத்தமும்,
     கலுழிக் கார் மத
மழை படு தரளமும்,
     மணியும், வாரி, நேர்
இழை படர்ந்தனைய நீர்
     அருவி எய்தலால்,
குழை படு முகத்தியர்
     கோலம் ஒப்பது;

     கழைபடு முத்தமும் - மூங்கிலிலிருந்து பெறும் முத்துக்களையும்;
கலுழிக் கார்மதம்- கலங்கலாகிய கரிய மதநீர்ப் பெருக்கை உடைய;
மழைபடு தரளமும்- மேகம் போன்ற யானையின் தந்தத்திலிருந்து தோன்றும்
முத்துக்களையும்; மணியும் - (பிற) மணிகளையும்; வாரி - வாரிக்கொண்டு;
நேர்இழை படர்ந்தனைய -
தக்க அணிகலன்கள் தன்மேல் பரவிப் படிந்தது
போன்ற; நீர் அருவி எய்தலால்- மலையருவி வந்து கலத்தலால்; குழைபடு
முகத்தியர் -
(அப்பொய்கை) காதணிகள்  பொருந்திய முகத்தையுடைய
மகளிரின்; கோலம் ஒப்பது - ஒப்பனையை ஒத்து விளங்கும்.

     மூங்கிலிடமிருந்தும் யானைத்தந்தத்திடமிருந்தும் கிடைத்த
முத்துக்களையும், மணிகளையும் வாரிக் கொணரும் அருவி நீர் தன்னிடத்துச்
சேர்வதால், பொய்கையானது மகளிர் முத்தும், மணியும் பூண்டு கோலம்
கொள்வதை ஒத்து விளங்கியது.  உவமை அணி.  மூங்கிலும் யானையும்
முத்துப்பிறக்கும் இடங்கள் என்பது கவிமரபு. வெள்ளமானது முத்து, மணி
முதலியவற்றை ஈர்த்து வரும் என்பதை ஆற்றுப்படலத்தும் (18) காணலாம். 10