3719. | பொங்கு வெங் கட கரி, பொதுவின் ஆடலின், - கங்குலின், எதிர் பொரு கலவிப் பூசலில் அங்கம் நொந்து அலசிய, விலையின் ஆய் வளை மங்கையர் வடிவு என, - வருந்தும் மெய்யது; |
பொங்கு வெங்கடகரி - (அந்நீர்நிலை) மிக்க வெம்மை வாய்ந்த மதநீரையுடைய யானைகள்; பொதுவின் ஆடலின் - பொதுவாக (நீரில்) மூழ்கித் திளைத்தலால்; கங்குலின் எதிர்பொரு- இரவுக் காலத்தில் தம்முள் எதிர்ப்பட்டுச் செய்கின்ற; கலவிப் பூசலில்- புணர்ச்சிப் போரினால்; அங்கம் நொந்து - உறுப்புகள் வருந்தி; அலசிய- சோர்ந்த; ஆய்வளை விலையின் மங்கையர் - ஆய்ந்தெடுத்த வளையல்களை அணிந்த விலைமகளிரது; வடிவு என - உடம்பு போல; வருந்தும் மெய்யது- வருந்தும் வடிவுடையது. பொருள் கொடுப்பவர்க்கெல்லாம் தம்மை அளிக்கும் விலைமகளிரை உவமை கூறுதற்கு ஏற்ப, 'பொதுவின் ஆடலின்' எனப்பட்டது. மதயானைகள் பல தனித்தனியே இறங்கித் திளைத்தலால் கலங்கிய பொய்கை, ஆடவர் பலரின் புணர்ச்சிப் போரால் வருந்திய விலைமகளிரின் சோர்ந்து மெலிந்த உடம்பு போன்று காணப்பட்டது: எனவே உவமை அணி. எதிர்ந்து என்னும் வினையெச்சம் பகுதி மாத்திரையாய் நின்றது. அலசுதல் - வருந்திச் சோர்தல்: 'திரு உடம்பு அலச நோற்கின்றான்'(2749) 11 |